கோவையில் தமிழ்நாடு தினவிழா கொண்டாட்டம் தனிக்கொடி ஏற்றிய நாம் தமிழர் கட்சியினர் 4 பேர் மீது வழக்கு
கோவையில் தமிழ்நாடு தினவிழா கொண்டாடப்பட்டது. இடிகரையில் தனிக்கொடி ஏற்றியதாக நாம் தமிழர் கட்சியினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை,
கடந்த 1956-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி சென்னை மாகாணத்தை மொழிவாரியாக பிரித்து தமிழ்நாடு என்று அறிவிக்கப்பட்டது. அந்த தினத்தை தமிழ்நாடு தினமாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உருவான தினத்தையொட்டி கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சாஜித், ரஞ்சித் பிரபு, ஜீவானந்தம் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), வக்கீல் வெண்மணி (திராவிடர் தமிழர் கட்சி), இளவேனில் (தமிழ் புலிகள்), நேரு (திராவிடர் விடுதலை கழகம்), நவீன் (தமிழர் விடியல் கட்சி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு கோவை சின்ன வேடம்பட்டியில் இருந்து மருதமலை வரை வேல் பயணம் நடைபெற்றது. இதனை கவுமார மடலாய சீரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
4 பேர் மீது வழக்கு
இதனைத்தொடர்ந்து பி.என்.புதூரில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் அருகில் தமிழ்நாடு தனிக்கொடி ஏற்றப்பட்டது.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சாய்பாபா காலனி போலீசார் விரைந்து வந்தனர். இதையடுத்து போலீசார் தனிக்கொடி இறக்கினர். அப்போது கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் 144 தடை உத்தரவை மீறி கூட்டம் கூட்டியதாக நாம் தமிழர் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள் விஜயராகவன், அப்துல் வகாப், வடக்கு மாவட்ட செயலாளர் கவஸ்கர், மாவட்ட பொருளாளர் சின்னதம்பி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story