வேறொரு பெண்ணுடன் கணவர்: வீடியோவை பார்த்ததால் தூக்குப்போட்டு மனைவி தற்கொலை - போலீசுக்கு பயந்து மெஸ்காம் ஊழியர் விஷம் குடித்தார்


வேறொரு பெண்ணுடன் கணவர்: வீடியோவை  பார்த்ததால் தூக்குப்போட்டு மனைவி தற்கொலை - போலீசுக்கு பயந்து மெஸ்காம் ஊழியர் விஷம் குடித்தார்
x
தினத்தந்தி 3 Nov 2020 4:45 AM IST (Updated: 3 Nov 2020 1:07 AM IST)
t-max-icont-min-icon

வேறொரு பெண்ணுடன் கணவர் உல்லாசமாக இருந்த வீடியோவை பார்த்ததால், மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு பயந்து மெஸ்காம் ஊழியரும் தற்கொலைக்கு முயன்றார்.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு டவுன் கெம்பனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரய்யா. இவரது மகள் ரஞ்சிதா(வயது 23). இதுபோல கடூர் தாலுகா பீருர் அருகே அகரேஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார்(30). இவர் சிக்கமகளூரு டவுனில் உள்ள மெஸ்காம் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்தார். இதனால் அருண்குமாருக்கும், ரஞ்சிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. மேலும் 2 பேரும் தூரத்து உறவினர்கள் என்பதால் 2 பேருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் அகரேஹள்ளி கிராமத்தில் அருண்குமார் சொந்தமாக வீடு கட்டினார். இதனால் அந்த வீட்டில் அருண்குமார், ரஞ்சிதா, அவரது குழந்தை வசித்து வந்தனர்.

இந்த நிலையில் திருமணத்திற்கு முன்பே அருண்குமாருக்கும், அகரேஹள்ளியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தததாகவும் கூறப்படுகிறது. மேலும் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த காட்சிகளை அருண்குமார் தனது செல்போனில் வீடியோ எடுத்து வைத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருண்குமார், கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை ரஞ்சிதா பார்த்து விட்டார். இதுதொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் கெம்பனஹள்ளியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு ரஞ்சிதாவை செல்ல கூடாது என்றும் அருண்குமார் கூறி உள்ளார். இதுதொடர்பாகவும் அவர்களுக்குள் சண்டை இருந்து வந்து உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சிதாவை அவரது பெற்றோர் வீட்டிற்கு அருண்குமார் அனுப்பி வைத்து இருந்தார். ஆனால் நேற்று முன்தினம் இரவு கள்ளத்தொடர்பு விவகாரம் குறித்து ரஞ்சிதாவுக்கும், அருண்குமாருக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அப்போது ரஞ்சிதாவிடம் உயிரை விட்டுவிடும்படி அருண்குமார் கூறியதாக தெரிகிறது. இதனால் ரஞ்சிதா மனம் உடைந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை ரஞ்சிதாவின் பெற்றோர் வெளியே சென்று இருந்தனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த ரஞ்சிதா தூக்கு கயிறை எடுத்து தனது கழுத்தில் போட்டு உள்ளார். பின்னர் அப்பகுதியில் வசித்து வரும் சகோதரர் சேத்தனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ரஞ்சிதா, நான் தற்கொலை செய்ய உள்ளேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சேத்தன், ரஞ்சிதா வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது ரஞ்சிதா தூக்கில் பிணமாக தொங்கினார். இதுபற்றி பசவனஹள்ளி போலீசாருக்கு சேத்தன் தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரஞ்சிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் சேத்தன், அருண்குமாரை செல்போனில் தொடர்பு கொண்டு ரஞ்சிதா தற்கொலை செய்தது பற்றி கூறினார். அப்போது அருண்குமார் தானும் தற்கொலை செய்ய போகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சேத்தன், தனது நண்பர்களுடன் காரில் அகரேஹள்ளிக்கு சென்றார்.

அப்போது அருண்குமார் வீட்டில் இருந்தார். அவர் முன்பு 9 காலி பீர் பாட்டில்கள் இருந்தன. சிகரெட்டுகளும் குவிந்து கிடந்தன. மேலும் அவர் சேத்தனிடம் 9 பீர் பாட்டில்களில் இருந்த பீரை குடித்ததாகவும், பீருடன் விஷத்தை கலந்து குடித்து விட்டதாகவும் கூறினார். இதனை கேட்டு அதிர்ந்த சேத்தனும், அவரது நண்பர்களும் அருண்குமாரை மீட்டு பீரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதால், போலீசுக்கு பயந்து அருண்குமார் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து பசவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த சம்பவம் சிக்கமகளூரு, அகரேஹள்ளி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story