கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை: நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட 10 பேர் கைது - ரூ.90 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்


கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை: நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட 10 பேர் கைது - ரூ.90 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Nov 2020 4:30 AM IST (Updated: 3 Nov 2020 1:21 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்ற நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.90 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்கவும், போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்று வந்த கும்பலை கைது செய்து, அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்திருந்தார்கள்.

அந்த போதைப்பொருட்கள் நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீஸ் கமிஷனர் கமல்பந்த், மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் ஆகிய 2 பேரும் பார்வையிட்டார்கள். பின்னர் போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

பெங்களூருவில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பல்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். போதைப்பொருள் விற்பனையை அடியோடு ஒழிக்க போலீஸ் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் இணையதளம் மூலமாக வெளிநாடுகளை சேர்ந்த போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை தொடர்பு கொண்டு, அவர்கள் மூலமாக பெங்களூருவுக்கு போதைப்பொருட்களை அனுப்பி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பெங்களூரு நகரில் 8 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டை சேர்ந்த சார்தக் ஆர்யா (வயது 31), முகமது ஆலிதோஜரி (29), விஜயநகரை சேர்ந்த நிதின் (24), ஜே.சி.நகரை சேர்ந்த கார்த்திக் கவுடா (25), அல்சூரை சேர்ந்த குமான் கஞ்சாமின் (25), மாரத்தஹள்ளியை சேர்ந்த சோன் சாய், இந்திராநகரை சேர்ந்த அமல் பைஜு (20), பீனிக்ஸ் டிசோசா (24), வெங்கட வருண் (33), நைஜீரியாவை சேர்ந்த சன்னி ஓ இன்னோசென்ட் (26) என்பது தெரியவந்தது.

இவர்கள் 10 பேரும் டார்க்நெட் என்ற இணையதளம் மூலமாக வெளிநாடுகளில் வசிக்கும் போதைப்பொருட்கள் விற்கும் கும்பலை சேர்ந்தவர்களை தொடர்பு கொள்வார்கள். அந்த கும்பல்களிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கி விற்பனை செய்வதை 10 பேரும் தொழிலாக வைத்திருந்தனர். அதாவது பிட்காயின் மூலமாக வெளிநாடுகளில் வசிக்கும் போதைப்பொருள் விற்கும் கும்பலுக்கு பணத்தை அனுப்புவார்கள். அந்த கும்பலினர் வெளிநாடுகளில் இருந்து தபால் மூலமாக பெங்களூருவுக்கு போதைப்பொருட்களை அனுப்பி வைப்பார்கள்.

அந்த போதைப்பொருட்களை பெங்களூரு நகரில் இருக்கும் கல்லூரி மாணவர்கள், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கு அதிக விலைக்கு விற்று பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் இருந்து 660 எல்.எஸ்.டி. போதை பேப்பர்கள், 566 போதை மாத்திரைகள், 10 கிராம் கொகைன், 12 செல்போன்கள், மடிக்கணினிகள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.90 லட்சம் ஆகும்.

இந்த சம்பவத்தில் கைதான 10 பேர் மீதும் எச்.எஸ்.ஆர். லே-அவுட், விஜயநகர், மகாலட்சுமிபுரம், அல்சூர், டி.ஜே.ஹள்ளி, இந்திராநகர், எச்.ஏ.எல். ராமமூர்த்திநகர் ஆகிய 8 போலீஸ் நிலையங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கும்பலை திறமையாக செயல்பட்டு பிடித்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். அவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story