செங்கோட்டையில் பரிதாபம்: குண்டாறு அணையில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர் சாவு
செங்கோட்டை குண்டாறு அணையில் மூழ்கி பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக இறந்தார்.
செங்கோட்டை,
தென்காசி மாவட்டம் செங்கோட்டை சுலைமான் நபி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நவாஸ் கான் மகன் ஜிப்ரீல் (வயது 15). இவரது நண்பர் அசார் (22). பள்ளிக்கூட மாணவர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலையில் குண்டாறு அணையில் குளிப்பதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் இருவரும் அணையில் குளித்தனர்.
அப்போது குளித்துக்கொண்டிருந்த ஜிப்ரீலை திடீரென்று காணவில்லை. உடனே அசார் கரைக்கு வந்தார். சிறிது நேரம் நின்றபடி ஜிப்ரீலை தேடினார். அவரை காணாததால் பயந்துபோன அசார் மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
தீயணைப்பு வீரர்கள் தேடினர்
வீட்டை விட்டு வெளியே சென்ற ஜிப்ரீல் வெகுநேரம் காணாததால் அசார் வீட்டிற்கு சென்று நவாஸ்கான் விவரம் கேட்டார்.
அப்போது அசார், நாங்கள் இருவரும் குண்டாறு அணையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஜிப்ரீலை திடீர் என்று காணவில்லை. நான் சிறிது நேரம் நின்றபடியே பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன் என்றார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நவாஸ்கான், உடனடியாக செங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தென்காசி மற்றும் செங்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட உதவி அலுவலர் சந்தோஷ் ஆனந்த் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் குண்டாறு அணைக்கு சென்று நேற்று காலையில் தீவிரமாக தேடினார்கள்.
பிணமாக மீட்பு
பின்னர் தண்ணீருக்குள் நவீன கேமரா பொருத்தி லேப்டாப் கருவிமூலம் கண்காணித்தனர். வெகுநேரமாகியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மாலை 5 மணி அளவில் ஜிப்ரீல் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடலை பார்த்ததும் உறவினர்கள், தாய் தந்தையர்கள் கதறி அழுதனர்.
பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து செங்கோட்டை இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், அணையில் மூழ்கி மாணவர் இறந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story