நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் 10 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் சிலிண்டர் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வந்தது
நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் சிலிண்டர் அமைக்கப்பட்டு உள்ளது. இது நேற்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வந்தது.
நாமக்கல்,
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், ஆக்ஸிஜன் பயன்பாடு அதிகரித்து உள்ளது. தினசரி 100 சிலிண்டர் வரை தேவைப்படுவதால் ஈரோட்டில் இருந்து கொண்டு வருவதில் சிரமம் இருந்து வந்தது.
இந்த நிலையில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மெகா ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்துவதற்கு நிதி ஒதுக்குமாறு தமிழக அரசிடம் ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று தமிழக அரசு ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில் ஆஸ்பத்திரி வளாகத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மெகா சிலிண்டர் பொருத்தப்பட்டு உள்ளது. இது நேற்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
1 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை
இது குறித்து ஆஸ்பத்திரி டீன் சாந்தா அருள்மொழி கூறியதாவது:-
இந்த மெகா சிலிண்டர் 1000 சிறிய சிலிண்டர்களுக்கு சமம். இதில் உள்ள ஒரு லிட்டர் திரவம் 800 லிட்டர் வாயுவை தரும். வாரத்திற்கு ஒருமுறை இந்த மெகா சிலிண்டரை நிரப்பினால் போதும். இதனால் போக்குவரத்து சிரமம் குறையும். நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கொரோனா பரவல் முடிவுக்கு வருவது பொதுமக்கள் கையில் தான் உள்ளது.
பொதுமக்கள் முககவசம் அணிவது, கைகளை சுத்தப்படுத்துவது, சமூக இடைவெளியினை பின்பற்றுவது மூலமாக தான் நோய் பரவல் முடிவுக்கு வரும். நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 1 லட்சத்து 94 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் 4,350 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா காலத்தில் இந்த ஆஸ்பத்திரியில் 5,200 பேருக்கு எக்ஸ்ரேயும், 3 ஆயிரம் பேருக்கு சி.டி.ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டு உள்ளது.
கர்ப்பிணிகள்
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை இங்கு 1,679 கர்ப்பிணிகள் குழந்தைகளை பெற்றெடுத்து உள்ளனர். இவர்களில் 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். கொரோனாவை பொறுத்த வரையில் இதுவரை 1,544 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இவர்களில் 604 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story