மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க ரூ.4 கோடியில் நவீன பாதுகாப்பு அறை


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க ரூ.4 கோடியில் நவீன பாதுகாப்பு அறை
x
தினத்தந்தி 3 Nov 2020 11:11 AM IST (Updated: 3 Nov 2020 11:11 AM IST)
t-max-icont-min-icon

கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வைக்க ரூ.4 கோடியில் நவீன பாதுகாப்பு அறை கட்டப்பட்டு வருகிறது.

கோவை,

நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் மாநகராட்சி தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை தேர்தல் முடிந்தவுடன் பாதுகாப்பாக அந்தந்த மாவட்டங்களிலேயே வைக்கப்படுகின்றன. அதன்படி கோவை மாவட்டத்துக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அந்த இடம் போதுமானதாக இல்லை.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்துக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பதற்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள காலி இடத்தில் புதிய நவீன பாதுகாப்பு அறை கட்டப்பட்டு வருகிறது.

லிப்ட் வசதி

ரூ.4 கோடியே 40 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் இந்த கட்டிடம் தரைத்தளம், முதல் தளம் மற்றும் 2-ம் தளங்களை கொண்டது. மூன்று தளங்களையும் சேர்த்து மொத்தம் 17 ஆயிரத்து 969 சதுர அடி பரப்பளவில் கட்டிடம் கட்டப்படுகிறது. 2 தளங்களுக்கு செல்வதற்கு லிப்ட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு யூனிட் 5 ஆயிரத்து 320-ம், வாக்குப்பதிவு யூனிட் 10 ஆயிரத்து 520-ம், வாக்குப்போட்ட பிறகு யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள உதவும் வி.வி.பேட் யூனிட் 5 ஆயிரத்து 304-ம் வைக்க முடியும். எந்திரங்கள் வைக்கப்படும் அறையில் குளிர் சாதன வசதியும் செய்யப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கட்ட தொடங்கிய இந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகள் அடுத்த மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஒரே இடத்தில்...

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒரே இடத்தில் இங்கு வைக்க முடியும். தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர் அவை இங்கேயே பாதுகாப்பாக வைப்பதற்கும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story