திருச்செந்தூர் கோவிலில், கந்தசஷ்டி திருவிழா 15-ந் தேதி தொடக்கம் - பக்தர்களை அனுமதிப்பது குறித்து நாளை முடிவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. திருவிழாவில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து நாளை (வியாழக்கிழமை) அறிவிக்கப்படும் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வருகிற 15-ந் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடங்கி 26-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. தற்போது கொரோனா நோய் கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் நவம்பர் 30-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இதில் தளர்வுகளுக்கு உட்பட்டு கந்த சஷ்டி விழாவை நடத்துவது மற்றும் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக கடந்த 2 நாட்களாக அறநிலையத்துறை அதிகாரிகளோடு கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
திருச்செந்தூர் கோவிலில் வருகிற 15-ந் தேதி கந்த சஷ்டி திருவிழா தொடங்கி 26-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முக்கிய திருவிழாவான சூரசம்ஹாரம் வருகிற 20-ந் தேதி நடக்கிறது. தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் கந்த சஷ்டி விழாவில் தேவையான அடிப்படை வசதிகள், எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது, பக்தர்கள் அமரவைப்பது, போலீஸ் பாதுகாப்பு பணி, சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்களை தரிசனத்திற்கு செல்வது ஆகியவை குறித்து ஆய்வு செய்தோம்.
இது தொடர்பாக நாளை (வியாழக்கிழமை) கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடக்கிறது. அன்றையதினம் பக்தர்கள் அனுமதி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று கூறினார். முன்னதாக கோவில் கலையரங்கம், கிரி பிரகாரம், சண்முகவிலாசம் முகப்பு பகுதி, கடற்கரை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது, உதவி கலெக்டர் (பயிற்சி) பிரிதிவிராஜ், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங், கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணி, உதவி ஆணையர் செல்வராஜ், கோவில் இளநிலை பொறியாளர் சந்தாண கிருஷ்ணன், தாசில்தார் முருகேசன், நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ஆனந்தன், மண்டல துணை தாசில்தார் பாலசுந்தரம், யூனியன் ஆணையாளர் ராமராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், உள்துறை கண்காணிப்பாளர்கள் ராஜ்மோகன், மாரிமுத்து, ஆனந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story