நெல்லை டவுனில் உரம் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து நெருக்கடி - பொதுமக்கள் அவதி


நெல்லை டவுனில் உரம் ஏற்றிச் சென்ற லாரி பள்ளத்தில் சிக்கியதால் போக்குவரத்து நெருக்கடி - பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 4 Nov 2020 3:30 AM IST (Updated: 4 Nov 2020 12:10 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை டவுனில் பள்ளத்தில் சிக்கிய உரமூட்டை லாரியால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

பேட்டை,

நெல்லை மாநகர பகுதியில் பெரும்பாலான முக்கிய ரோடுகளில் பள்ளம் தோண்டப்பட்டு போக்குவரத்துக்கு தகுதி இல்லாத மோசமான நிலையில் உள்ளது. கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பதிப்பு மற்றும் பாதாள சாக்கடை குழாய்கள் பதிப்பு என அடுத்தடுத்து தோண்டப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடிந்த பகுதியில் ரோடு சீரமைக்கப்படாமல் மேடு, பள்ளமாகவும், புழுதி மண்டலமாகவும் காட்சி அளிக்கிறது.

இந்த பிரச்சினைகளுக்கு இடையே டவுன் காட்சி மண்டபம் அருகே சாலை மோசம் அடைந்த பகுதியில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதையொட்டி அருகில் உள்ள குறுகிய தெரு வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டு உள்ளது.

மோசமாக உள்ள அந்த ரோடு வழியாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சிரமப்பட்டு செல்கின்றன. இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உரமூட்டைகள் ஏற்றிய லாரி ஒன்று நெல்லை வழியாக கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி குறிப்பிட்ட ரோடு வழியாக சென்ற போது அங்குள்ள பள்ளத்தில் சிக்கி ஒருபுறமாக சாய்ந்து நின்றது. லாரியில் இருந்து சில உரமூட்டைகள் கீழே சரிந்து விழுந்தன. இதையடுத்து அந்த ரோட்டில் போக்குவரத்து தடைபட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் டவுன் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து லாரியை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். மாற்று லாரி வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் சிக்கிய லாரியில் இருந்த உரமூட்டைகளை மற்றொரு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story