நெல்லை மேலப்பாளையத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு


நெல்லை மேலப்பாளையத்தில் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Nov 2020 3:45 AM IST (Updated: 4 Nov 2020 12:17 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மேலப்பாளையத்தில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மேலப்பாளையம் மாட்டுச்சந்தை எதிரே உள்ள அமுதாநகரில் தனியார் ஒருவருக்கு சொந்தமான பட்டறை பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என்று ஏற்கனவே அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடமும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

இந்த நிலையில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு பள்ளம் தோண்டி காங்கிரீட் அமைக்கும் பணியும், அதுதொடர்பாக அடுத்தக்கட்ட பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதைக் கண்டித்து நேற்று அந்தப்பகுதி பொது மக்கள் திரண்டனர். இந்திய தேசிய லீக் கட்சியின் மேலப்பாளையம் பகுதி தலைவர் அப்துல் காதர் தலைமையில் அங்குள்ள மாட்டுச்சந்தை மெயின் ரோட்டில் மறியல் செய்ய முயன்றனர். இதற்கிடையே தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைக்கும் பகுதியை முற்றுகையிட்டனர். “இந்த பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story