தென்காசி பகுதியில், தக்காளி விலை கடும் சரிவு - விவசாயிகள் வேதனை


தென்காசி பகுதியில், தக்காளி விலை கடும் சரிவு - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 4 Nov 2020 4:00 AM IST (Updated: 4 Nov 2020 12:27 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி பகுதியில் தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.

தென்காசி,

காய்கறிகளில் முக்கியமான ஒன்று தக்காளி. சாம்பார் மற்றும் கறி வகைகள் சமையல் செய்யும்போது தக்காளி கண்டிப்பாக சேர்ப்பார்கள். தென்காசி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுவதில் தக்காளியும் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தக்காளி சாகுபடி செய்ததில் நல்ல விளைச்சல் உள்ளது. ஆனால் சந்தைகளில் இதன் விலை மிகவும் குறைந்து உள்ளது. ஒரு கிலோ தக்காளி 7 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விவசாயிகள் சந்தைக்கு கொண்டு செல்லும்போது 5 ரூபாய்க்கு கேட்கிறார்கள். ஆனால் உற்பத்தி செலவு அதிகமாக உள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

தென்காசி அருகே உள்ள இடைகாலை சேர்ந்த அய்யப்பன் என்ற விவசாயி கூறியதாவது:-

எங்கள் பகுதியில் சுமார் 25 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்தோம். தக்காளியின் ஒரு நாற்றுக்கு ரூ.1 கொடுத்து வாங்கி அதனை பயிரிட்டு தற்போது 90 சதவீதம் விளைச்சல் ஏற்பட்டுள்ளது. சந்தைக்கு கொண்டு செல்லும்போது ஒரு கிலோ 5 ரூபாய்க்கு கேட்கிறார்கள். விளைச்சல் அதிகமானதால் இப்படி ஏற்பட்டுள்ளதா? என்பது தெரியவில்லை.

புரட்டாசி மாதம் கிலோ ரூ.15 ஆக இருந்தது. இந்த மாதம் முகூர்த்தம் அதிகமாக உள்ள மாதம். சுப காரியங்கள் நடக்கக்கூடிய மாதம். ஆனாலும் விலை மிகவும் மோசமாக சரிந்துள்ளது.

தொழிலாளர்களுக்கு கொடுத்த சம்பளம் கூட கிடைக்கவில்லை. இது எங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஈடு கட்ட அரசு எங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story