திருவள்ளூர் அருகே பரிதாபம்: கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி - 4 கி.மீ. தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டு உடல் கரை ஒதுங்கியது
திருவள்ளூர் அருகே கிருஷ்ணா கால்வாயில் நண்பர்களுடன் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த காக்களூர் மாருதி நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த சேக் இமாம். இவரது மகன் ஷேக் இம்ரான் (வயது 20). இவர் சென்னை வேளச்சேரியில் உள்ள கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் திருவள்ளூர் பெரியகுப்பம் சித்திவிநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினீயர் 3-ம் ஆண்டு பயின்று வரும் விக்ரம் (20) மற்றும் திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் ஜெ.ஜெ.நகரை சேர்ந்த பி.எஸ்சி. படிக்கும் மாணவரான பிரவீன்குமார் (20) ஆகிய 2 நண்பர்களுடன் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் திருவள்ளூர் அருகே புல்லரம்பாக்கம் காந்திநகர் அருகே பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் குளிக்கச் சென்றார். அப்போது நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் ஷேக் இம்ரானும், பிரவீன்குமாரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பிரவீன்குமார் மட்டும் செடிகளை பிடித்துக்கொண்டு தப்பி மேலே வந்து விட்டார்.
ஆனால், ஷேக் இம்ரான் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அடித்துச்செல்லப்பட்டார். இதைக் கண்டு கூச்சலிட்ட பிரவீன்குமார் மற்றும் விக்ரம் ஆகியோர் சுமார் 200 மீட்டர் தூரம் வரை அவரை மீட்க ஓடினர். இருப்பினும் அவர்கள் ஷேக் இம்ரானை காப்பாற்ற முடியவில்லை.
பின்னர் இதுகுறித்து அவர்கள் 2 பேரும் அக்கம்பகத்தில் உள்ளவர்களிடம் தகவல் கூறி அழுது புலம்பினார்கள். இதைத்தொடர்ந்து புல்லரம்பாக்கம் போலீசாருக்கும், திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன் உத்தரவின் பேரில், புல்லரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நீரில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவரை மீட்க போராடினார்கள். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு 700 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், வாய்க்கால் நிறைய தண்ணீர் வேகமாக சென்றதால் மாணவரை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அதோடு இரவு பத்து மணி வரையிலும் மாயான அவரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று காலையும் புல்லரம்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடினார்கள். இந்நிலையில் கிருஷ்ணா கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவரின் உடல் சுமார் 4 கிலோமீட்டர் தொலைவிற்கு தண்ணீரில் அடித்து வரப்பட்டு ஈக்காடு பாலம் அருகே பள்ளத்தில் கரை ஒதுங்கி சேற்றில் சிக்கி இருந்தது.
இதைக் கண்ட அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அவரது சாவு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த கல்லூரி மாணவர் ஷேக் இம்ரான் உடலை கண்டு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுத சம்பவம் கல் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
Related Tags :
Next Story