பொன்னேரி-ஆந்திரா வரை 136 கி.மீ. தூரத்துக்கு திட்டம்: 6 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு - கருத்து கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
பொன்னேரி-ஆந்திரா வரை 136 கி.மீ.க்கு ரூ.3 ஆயிரத்து 500 கோடியில் அமைக்கப்படவுள்ள 6 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள தச்சூர் கூட்டு சாலையில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை 136 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.3 ஆயிரத்து 500 கோடி செலவில் 6 வழிச்சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சாலை கண்ணிகைபேர், பெரியபாளையம், தண்டலம், தொளவெடு, காக்கவாக்கம், பருத்திமேனிக்குப்பம், தும்பாக்கம், பாலவாக்கம், சென்னங்கரனை, போந்தவாக்கம்பாலவாக்கம், சென்ன சென்னங்காரணி, போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, வெங்களத்தூர், பிச்சாட்டூர் வழியாக சித்தூர் வரை அமைய உள்ளது.
இந்த சாலை அமைக்கும் பணிக்காக ஊத்துக்கோட்டை தாலுகாவில் சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க முடிவு செய்து, நிலம் அளந்து கற்கள் நடும் பணிகள் நிறைவடைந்தன. இதற்கு அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த இரண்டு வருடங்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தங்கள் பகுதிகளில் 6 வழிச்சாலை அமைத்தால் வீடுகள், கட்டிடங்கள், கோவில்கள், விளைநிலங்களை இழக்கும் நிலை உள்ளதால் விவசாயிகள் ஏற்கனவே ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் விவசாயிகள் தங்கள் ரேஷன் அட்டைகளை வீதியில் வீசி போராட்டம் நடத்தினார்.
ஆயினும் 6 வழிச்சாலை அமைக்கும் பூர்வாங்க பணிகளில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் சில தினங்களில் நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பணிகளுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் விவசாயிகளின் கடைசி கருத்து கேட்பு கூட்டம் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலை துறை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் குணசேகரன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
6 வழிச்சாலை 70 மீட்டர் அகலத்திற்கு அமைக்க ஆரம்பத்தில் திட்டமிட்டோம். ஆனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 60 மீட்டர் ஆக குறைத்துள்ளோம். நெடுஞ்சாலை அமைக்கும் பணிக்கு நிலம் வழங்கும் நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நிலத்துக்கு ஏக்கருக்கு ரூ.1.50 லட்சம் வழங்க அரசு நிர்ணயம் செய்துள்ளது.
6 வழிச்சாலை அமைந்தால் விவசாயிகள் தங்கள் விளைப்பொருட்களை தமிழ் நாட்டில் மட்டுமின்றி ஆந்திராவுக்கு கூட எளிதில் எடுத்துச்சென்று விற்பனை செய்ய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது 6 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 6 வழிச்சாலை அமைக்க நிலம் வழங்க மாட்டோம். இதற்காக உயிரை விடவும் தயார் என்று எச்சரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் சிறப்பு தாசில்தார் பிரீத்தி, ஊத்துக்கோட்டை வட்டம் நஞ்சை நில விவசாயிகள் நலச்சங்க தலைவர் ஸ்ரீராமன், செயலாளர் உதயகுமார், பொருளாளர் சேகர்ரெட்டி, சங்க பிரதிநிதிகள் ஐயப்பன் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story