கொட்டரை நீர்த்தேக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரி கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா
கொட்டரை நீர்த்தேக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரி நிலம் வழங்கியவர்கள் கலெக்டர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.108 கோடி மதிப்பீட்டில் நீர்த்தேக்க கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, கடந்த 2012 ஆம் ஆண்டு ஆதனூர், கொட்டரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. நீர்த்தேக்கம் கட்டுவதற்கு நிலம் வழங்கிய ஆதனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பலருக்கு, நிலம் கையகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும், இதுவரை அரசு உரிய இழப்பீட்டு தொகை வழங்கவில்லை. இது குறித்து பலமுறை விவசாயிகள் குறைதீர் கூட்டங்களிலும், மாவட்ட கலெக்டரிடம் நேரிலும் கோரிக்கை மனு அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது.
தர்ணா
இதனால் ஆத்திரம் அடைந்த ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த நீர்த்தேக்க திட்டத்துக்காக நிலம் வழங்கிய சுமார் 50-க்கும் மேற்பட்டோர், தங்களிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கக் கோரி நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீர்த்தேக்க கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்துவோம், என்று கோஷமிட்டனர். பின்னர், தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story