காவலர் தேர்வு நிறுத்தப்பட்ட விவகாரம்: கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்கள் மீது தடியடி - போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


காவலர் தேர்வு நிறுத்தப்பட்ட விவகாரம்: கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றவர்கள் மீது தடியடி - போலீசாருடன் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Nov 2020 4:00 AM IST (Updated: 4 Nov 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

காவலர் தேர்வை உடனே நடத்தக் கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற போது தடுத்து நிறுத்தி தடியடி நடத்திய போலீசாரிடம் இளைஞர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவையில் 431 காவலர் பணியிடங்களை நிரப்ப இன்று (புதன்கிழமை) முதல் உடல் தகுதி தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் எலக்ட்ரானிக் சிப் முறைக்கு பதிலாக விசில் முறையில் ஓட்டம் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த அரசு முடிவு செய்து இருப்பதாகவும் இதை பின்பற்றுவதால் ஆட்கள் தேர்வு செய்வதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

கவர்னருக்கும் இதுகுறித்து புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து உடல்தகுதி தேர்வை ரத்து செய்து கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் முறைகேடு நடக்காத வகையில் ஏற்கனவே திட்டமிட்டபடி காவலர் உடல் தகுதி தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தின.

இந்தநிலையில் காவலர் தேர்வினை திடீரென ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் நேற்று அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், அகில இந்திய மாணவர் சங்கம் சார்பில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி புதுவை காமராஜர் சிலை அருகே அவர்கள் கூடினார்கள். அங்கிருந்து கவர்னர் மாளிகை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு நிர்வாகிகள் சரவணன், அந்தோணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஊர்வலம் நேரு வீதி-மிஷன் வீதி சந்திப்பு அருகே வந்தபோது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். ஆனால் அதையும் மீறி கவர்னர் மாளிகை நோக்கி செல்ல அவர்கள் முயன்றனர். தொடர்ந்து போலீசார் தடுத்து நிறுத்திய போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.

பின்னர் போலீசாரின் தடுப்புகளை தள்ளிவிட்டு இளைஞர் பெருமன்றத்தினர் கவர்னர் மாளிகை நோக்கி ஓடினார்கள். வேறு வழியின்றி இளைஞர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினார்கள். அப்போது அவர்கள் போலீசாரின் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் கவர்னர் மாளிகை அருகே அமர்ந்து காவலர் தேர்வை ரத்து செய்ததற்காக கவர்னரை கண்டித்தும், உடனடியாக உடல் தகுதி தேர்வை நடத்தக் கோரியும் இளைஞர்கள் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். அங்கிருந்து அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.

கவர்னர் மாளிகை முன்பு இளைஞர்கள் நடத்திய போராட்டம் மற்றும் தடியடி காரணமாக அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட் டது.

Next Story