தஞ்சைக்கு வந்த 3 டன் எகிப்து வெங்காயம் காரம் அதிகம் இருந்தாலும் மக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை
பீட்ரூட் நிறத்தினால் ஆன எகிப்து நாட்டு வெங்காயம் 3 டன் தஞ்சை வந்தது. காரம் அதிகம் இருந்தாலும் அதனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.
தஞ்சாவூர்,
பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தஞ்சையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தரத்தில் சிறியது ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தஞ்சைக்கு மராட்டியம், ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக வெங்காயம் கடும் சேதம் ஏற்பட்டது. இதனால் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி குறைந்தது. தஞ்சை மார்க்கெட்டிற்கு மட்டும் தினமும் 100 டன் விற்பனைக்கு வரும். ஆனால் தற்போது 20 டன் முதல 30 டன் அளவு தான் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
எகிப்தில் இருந்து வரவழைப்பு
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்படி எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் சென்னை கொண்டு வரப்பட்டு அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் லாரிகள், சரக்கு ஆட்டோக்களில் அனுப்பப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று தஞ்சையில் உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டிற்கு எகிப்து நாட்டில் இருந்து வந்த 3 டன் வெங்காயம் சரக்கு ஆட்டோவில் கொண்டு வரப்பட்டது. இந்த வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வெங்காயம் மிகவும் பெரிய அளவில் இருந்தது. ஒரு சில வெங்காயம் ½ கிலோ எடை கொண்ட வகையில் இருந்தது.
பீட்ரூட் நிறம்
பீட்ரூட் நிறத்தில் காணப்பட்டாலும் இந்த வெங்காயத்தில் காரத்தன்மை நாட்டு வெங்காயத்தை விட கூடுதலாக இருந்தது. தஞ்சை வந்த 3 டன் வெங்காயத்தில் இருந்து ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை மார்க்கெட்டிற்கு நேற்று ஒரே ஒரு கடைக்கு மட்டும் இந்த வெங்காயம் வந்தது.
இது குறித்து எகிப்து வெங்காயத்தை வாங்கி விற்பனை செய்த வியாபாரி சிதம்பரம் கூறுகையில், “எகிப்து வெங்காயம் கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு மூட்டை வெங்காயத்தில் 3 கிலோ வரை சேதம் காணப்படுகிறது. இந்த வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. பொரும்பாலும் நாட்டு வெங்காயத்தையே வாங்கி சென்றனர். இதனால் தஞ்சையில் இருந்து மற்ற ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சையில் ஓட்டல்களுக்கு தான் இந்த வெங்காயம் அனுப்பி வைக்கப்படுகிறது” என்றார்.
Related Tags :
Next Story