வெம்பக்கோட்டையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க - மைய கட்டிட பணிகள் தீவிரம்


வெம்பக்கோட்டையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க - மைய கட்டிட பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 4 Nov 2020 8:51 PM IST (Updated: 4 Nov 2020 8:51 PM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டையில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் வெம்பக்கோட்டையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி வெம்பக்கோட்டையில் ரூ.1 கோடியே 75 லட்சம் செலவில் கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த மையத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை வணிகத்துறை ஆகிய 4 துறைகளுக்கான அலுவலகங்கள் செயல்படும். வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் பகுதி விவசாயிகளை இணைத்து வைப்பாறு உழவர்கள் உற்பத்தியாளர் கம்பெனி அமைக்கப்படும். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

வேளாண்மை துறை சார்பாக நெல் விதை, உர மூடைகள், நுண்ணூட்ட உரங்கள் ஆகியவை இந்த மையத்தில் விற்பனைக்கு வைக்கப்படும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு விலை குறையும் போது மக்காச்சோளம், உளுந்து, பாசி ஆகியவைகளை விவசாயிகளிடம் இருந்து வாங்கி அதிக லாபம் கிடைக்க மதிப்பு கூட்டு எந்திரம் அமைக்கப்படும்.

சேமிப்பு கிட்டங்கி மற்றும் களம், குடோன் வசதி விவசாயிகளுக்கு தேவை என்றால் இந்த மையத்தை அணுகலாம். 100 பேர் கொண்ட உழவர் உற்பத்தியாளர்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியம் கிடைக்கும். மின் மோட்டார்கள், டிராக்டர், மக்காச்சோளம், கதிரடிக்கும் எந்திரம், விதைக்கும் எந்திரம், வாங்க வேண்டுமென்றால் கிருஷ்ணன்கோவில் அல்லது விருதுநகர் தான் செல்ல வேண்டும்.

இங்கு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் செயல்படும் போது இங்கேயே விவசாயிகள் சூரிய ஒளியின் மூலம் இயங்கும் மின் மோட்டார்கள் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மானிய விலையில் வாங்கலாம்.

அனைத்து வகை எந்திரங்களும், இங்கேயே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இதனால் விவசாயிகளின் வீண் அலைச்சல் தவிர்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கும் தேவைப்படும் எந்திரங்கள் உடனுக்குடன் வழங்கப்படும். தோட்டக்கலைத்துறை மூலமாக விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் வாங்கிக்கொள்ளலாம். இந்த மையம் செயல்படும் போது 36 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள் இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story