ஆரணி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர் - பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்


ஆரணி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய வாலிபர் - பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்
x
தினத்தந்தி 4 Nov 2020 9:52 PM IST (Updated: 4 Nov 2020 9:52 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே பட்டப்பகலில் வீடுபுகுந்து திருடிய வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரணி,

ஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி கவுரி (வயது 55). தனியாக வசித்துவரும் இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிக்கொண்டு அருகில் உள்ள மகள் மகேஸ்வரி வீட்டிற்கு சென்றுள்ளார்.

மதியம் சாப்பிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, முன்பக்க கதவுகள் திறந்த நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் ஒருவர் பீரோவை உடைத்து திருடிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். இதை கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அப்போது வீட்டுக்குள் இருந்த நபர் தப்பி ஓடமுயன்றார். அவரை பொதுமக்கள் பிடித்து கட்டிபோட்டு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட நபரிடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த ஒரத்தை கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த்குமார் (34) என்பது தெரியவந்தது. மேலும் இவர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் வீடு புகுந்து திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

அவரிடமிருந்து 1½ பவுன் நகை, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பட்டப்பகலில் வீடுபுகுந்து திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடிகொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story