நெல்லையில் சிகரெட் பிடித்த தகராறில் பயங்கரம்: பா.ஜனதா நிர்வாகி துப்பாக்கியால் சுடப்பட்டார் - முன்னாள் ராணுவ வீரர்-மகன் கைது


நெல்லையில் சிகரெட் பிடித்த தகராறில் பயங்கரம்: பா.ஜனதா நிர்வாகி துப்பாக்கியால் சுடப்பட்டார் - முன்னாள் ராணுவ வீரர்-மகன் கைது
x
தினத்தந்தி 5 Nov 2020 5:00 AM IST (Updated: 4 Nov 2020 11:18 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சிகரெட் பிடித்த தகராறில் பா.ஜனதா நிர்வாகி துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக முன்னாள் ராணுவ வீரரும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெபமணி (வயது 70). முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பெரியதுரை (34). இவர் பெருமாள்புரத்தில் கோழி, ஆடு இறைச்சி கடை நடத்தி வருகிறார். மேலும், நெல்லை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். பெரியதுரை, ஜெபமணி ஆகியோருக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் பெரியதுரை தனது கடை முன்பு நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜெபமணி இங்கே நின்று எப்படி நீ சிகரெட் பிடிக்கலாம்? என்று கேட்டார். அதற்கு பெரியதுரை நான் எங்கள் இடத்தில் நின்று தான் புகைப்பிடிக்கிறேன். இதைக் கேட்க நீங்கள் யார்? என்று கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெபமணி வீட்டில் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து வந்து பெரியதுரையை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கியால் சுடப்பட்டதில் பெரியதுரை கையில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் விரைந்து வந்து அவரை மீட்டு அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், ஜெபமணி துப்பாக்கியால் சுடுவதும், அவருடைய மகன் சர்ச்சில் சுந்தர்சிங் (32) அருகில் நிற்கும் காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து ஜெபமணி, சர்ச்சில் சுந்தர்சிங் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெபமணி முன்னாள் ராணுவ வீரர் என்பதால் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்திருந்தார். அந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பெரியதுரையை, பாரதீய ஜனதா கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் தயாசங்கர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

மேலும், பெருமாள்புரம் போலீஸ் நிலையம் முன்பு அவர்கள் திரண்டனர். அவர்களிடம், இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி துப்பாக்கியால் சுடப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story