வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து திரையரங்குகளும் பின்பற்ற வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவுறுத்தல்
வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து திரையரங்குகளும் பின்பற்ற வேண்டும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவுறுத்தினார். தூத்துக்குடியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி,
தமிழகத்தில் வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் திரையரங்குகளை திறக்க அரசு சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்ட கலெக்டர்கள் மூலம் அனைத்து திரையரங்குகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்படும். அந்த நெறிமுறைகளை அனைத்து திரையரங்குகளும் முழுமையாக பின்பற்ற வேண்டும். திரையரங்க உரிமையாளர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். 100 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகளை இயக்குவது குறித்து, வரும் காலங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப முதல்-அமைச்சர் முடிவு செய்வார்.
கொரோனா தடுப்பு பணிக்காக தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில்தான் பணி அமர்த்தப்பட்டனர். அவர்களது விருப்பத்தின் பேரிலேயே பணியில் சேர்ந்தனர். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. அடுத்து அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடைபெறும்போது, கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு நிச்சயமாக அரசு முன்னுரிமை அளிக்கும்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் அடுத்த அலை ஏதும் வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்தி உள்ளது. இருப்பினும் தொடர்ந்து கொரோனா தடுப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி தூத்துக்குடி வருகிறார். அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதல்-அமைச்சர் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்கனவே தயாராக உள்ளன.
கொரோனா தடுப்பு பணிகளோடு, மாவட்டத்தின் வளர்ச்சி திட்டப்பணிகளையும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்கிறார். மேலும், மாவட்டத்துக்கான புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிடுகிறார். தூத்துக்குடி மாவட்ட மக்கள் திருப்திபடும் வகையிலான அறிவிப்புகள் இருக்கும்.
புதிதாக தொடங்கப்படும் பள்ளிகளுக்கு கட்டிட அனுமதி பெற உள்ளூர் திட்டக்குழுவில் விண்ணப்பித்து இருந்தாலே போதும், பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளார். அதன்படி தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நெல்லையில் நடைபெறவுள்ளது.
அதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்டு பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை வழங்குகிறார். இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 83 பள்ளிகள் தொடங்க அங்கீகார ஆணை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story