சாத்தான்குளம் அருகே, தாயை கொல்ல முயற்சி - மகனுக்கு போலீசார் வலைவீச்சு
சாத்தான்குளம் அருகே தாயை கொல்ல முயன்ற மகனை போலீசார் தேடிவருகின்றனர்.
சாத்தான்குளம்,
சாத்தான்குளம் அருகே பனைக்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த நாராயணன் மனைவி ரீட்டா (வயது 60). இவர் அவரது மகன் மன்மதன், அவரது மனைவி, குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மன்மதன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனால், அவரது மனைவி ஒரு மாதத்திற்கு முன்பு கோபித்து கொண்டு, அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில், கடந்த 2-ஆம்தேதி மது அருந்தி வந்த மன்மதன், ரீட்டாவிடம் தகராறு செய்துள்ளார். அதனை தாயார் கண்டித்துள்ளார். இதில் ஏற்பட்ட வாய்தகராறில் மன்மதன், தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டிலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து மன்மதன் சகோதரி ஜெயா (42) வீட்டுக்கு வந்துள்ளார். பலத்த காயங்களுடன் இருந்த தாயாரை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜெயா சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து மன்மதன் மீது தாயை அவதூறாக பேசி கொலை செய்ய முயன்றதாக போலீசார் வழக்குபதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story