நெல்லை அருகே, முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு


நெல்லை அருகே, முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 5 Nov 2020 3:45 AM IST (Updated: 4 Nov 2020 11:57 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகையை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பேட்டை,

நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே கோமதி நகரைச் சேர்ந்தவர் பிரம்மநாயகம் (வயது 65). முன்னாள் ராணுவ வீரர். இவருடைய மனைவி ராணி (55). இவர்களுடைய மகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், பாளையங்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால் அனைவரும் அந்த ஆஸ்பத்திரியிலேயே தங்கினர்.

இதற்கிடையே பிரம்மநாயகத்தின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அங்கு திருட திட்டமிட்டனர். அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள், பிரம்மநாயகத்தின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து திறந்து அதில் இருந்த 10 பவுன் நகை மற்றும் மடிக்கணினி ஆகியவற்றை திருடிச் சென்றனர்.

நேற்று காலையில் பிரம்மநாயகத்தின் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து பிரம்மநாயகத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வீட்டுக்கு வந்த பிரம்மநாயகம், இதுகுறித்து சுத்தமல்லி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் கதவை உடைத்து நகை, மடிக்கணினியை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story