வண்டலூர் பூங்காவை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம் - நுழைவு கட்டணம் உயர்வு
வண்டலூர் பூங்காவை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வண்டலுர்,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் 17-ந்தேதி முதல் வண்டலூர் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு தடை விதித்து மூடப்பட்டுள்ளது. ஆனால் பூங்கா ஊழியர்கள் மட்டும் முககவசம் மற்றும் கையுறை அணிந்து தொடர்ந்து பூங்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் சில தளர்வுகளுடன் வருகிற 10-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் வண்டலூர் பூங்கா திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனையடுத்து வண்டலூர் பூங்காவை பொதுமக்கள் பார்வைக்காக திறப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காவில் நுழைவு கட்டண சீட்டு வாங்கும் இடத்தில் கிருமிநாசினி எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தின் அடிப்பகுதியில் பொதுமக்கள் கைகளை நீட்டினால் தானியங்கியாக கிருமிநாசினி தெளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு சீட்டு பெற்று பூங்காவுக்குள் நுழையும் இடத்தில் பொதுமக்கள் தங்களது கால்களை கிருமி நாசினியில் மிதித்து வரும்படி சிறிய அளவில் தரையில் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்த தொட்டியில் தண்ணீரில் கலந்த கிருமி நாசினி ஊற்றி வைக்கப்படும், பூங்காவில் மோட்டார் சைக்கிளில் நிறுத்தம் நுழைவு வாயில் பகுதியில் தரையில் சிறிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் கிருமிநாசினியை தண்ணீரில் கலந்து ஊற்றி வைக்கப்படும் பூங்காவுக்கு வரும் மோட்டார் சைக்கிளின் தொட்டியை கடந்து செல்லும் போது டயர்கள் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்படுகிறது.
பூங்கா முழுவதும் பல்வேறு இடங்களில் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறிய அளவிலான பதாகைகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. அதில் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், உபயோகித்த முக கவசம், மற்றும் கையுறைகளை குப்பை தொட்டியில் போடவேண்டும், பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள், இருக்கைகள் போன்றவை தொடுவதை தவிர்க்கவும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகளுடன் காணப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 17-ந்தேதி முதல் பூங்கா மூடப்பட்டு 238 நாட்களுக்கு பிறகு வருகின்ற 10-ந்தேதி திறப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பூங்காவில் போதிய வருவாய் இல்லாத காரணத்தால் பூங்காவின் கட்டணத்தை உயர்ந்த பூங்கா நிர்வாகம் முடிவு செய்து புதிய கட்டணத்திற்காக அறிவிப்பு பலகையை நுழைவு கட்டண சீட்டு வாங்கும் இடத்தில் வைத்துள்ளது. ரூ.75-ல் இருந்த பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூ.90-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. (5 முதல் 12 வயதுக்குள்), சிறுவர்களுக்கு ரூ.35 ஆக இருந்த கட்டணத்தை ரூ.50 -ஆக உயர்த்தி உள்ளனர். இதே போல ஹேண்டி கேமரா, வீடியோ கேமரா, பூங்கா சுற்று வாகனம், சிங்கம், மான்கள் உலாவிடம் செல்லும் வாகன கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பூங்காவில் கழிவறை பயன்படுத்தினால் தனியாக கட்டணம் செலுத்தப்பட வேண்டும். தற்போது நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்ட காரணத்தால் பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் கழிவறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தாய்ப்பால் ஊட்டும் அறை ஆகியவற்றை இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். புதிய அறிவிப்பு பலகையில் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு முன்பு 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் பெரியவர்கள் நுழைவு கட்டணம் ரூ.30-ல் ரூ.50-ஆகவும், சிறியவர்கள் கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.20-ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் 10-ந்தேதி பூங்காவின் கட்டணம் பெரியவர்கள் ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆக உயர்த்தப்பட்டது. சிறியவர்கள் கட்டணம் ரூ.20-ல் இருந்து ரூ.35 ஆக உயர்த்தப்பட்டது கடந்த 3 வருடங்களில் பூங்காவின் நுழைவு கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங்கள் 3 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூங்கா திறப்பு குறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில்:- தமிழக அரசு அறிவித்தப்படி வருகிற 10-ந்தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிச்சயமாக 10-ந்தேதி திறக்கப்படுமா? என்பது பற்றி உறுதியாக கூறமுடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவால் பூங்காவின் நிதியை கருத்தில் கொண்டு நுழைவு கட்டணம் உள்பட பல்வேறு கட்டணங் கள் உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story