சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 28-ந்தேதி தொடங்கியது. அதன்படி, சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன் மழை பெய்து சென்னையை குளிர்வித்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
அதைத்தொடர்ந்து காலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், நேற்று காலை 9 மணியளவில் கிண்டி, வடபழனி, கோயம்பேடு, சூளைமேடு, எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், வேப்பேரி, ஓட்டேரி, பெரம்பூர், வில்லிவாக்கம், மூலக்கடை, கொளத்தூர், மாதவரம், புழல், செங்குன்றம், அடையாறு, நந்தனம் உள்பட சென்னையின் பல்வேறு இடங்களிலும், சென்னையின் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்ய ஆரம்பித்து.
இந்த மழையானது, லேசாக பெய்யத் தொடங்கி, சற்று நேரத்தில் கனமழையாக பெய்தது. காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை சென்னையின் பல்வேறு இடங்களிலும் இந்த கனமழை கொட்டி தீர்த்தது. பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
காலையில் வேலைக்கு செல்லும் நேரம் என்பதால் பலரும் முன் எச்சரிக்கையாக மழைக்கோட்டு அணிந்து கொண்டு அலுவலகங்களுக்கு சென்றனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் மழையில் நனைந்தபடியே சென்றதை பார்க்க முடிந்தது. திடீர் மழை காரணமாக சாலையோர கடை வியாபாரிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.
சாலையில், வாகனங்களில் சென்றவர்கள் மழை காரணமாக தங்கள் வாகனத்துக்கு முன் செல்லும் வாகனம் தெரிவதற்காக முகப்பு விளக்குகளை போட்ட படி பயணித்தனர். இதனால், வாகனங்கள் வேகமாக பயணிக்க முடியாமல் மெதுவாக செல்வதை பார்க்க முடிந்தது. காலையில் சுமார் 2 மணி நேரம் பெய்த கனமழை சற்று ஓய்ந்து மதியம் 12 மணியளவில் மீண்டும் வெயில் அடிக்கத் தொடங்கியது. பிற்பகலில் மேலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மொத்தத்தில், நேற்று காலையில் பெய்த கனமழை சென்னையை குளிர்வித்தது என்று சொன்னால் அது மிகை அல்ல. இதனால், சென்னை வாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story