மின்சார வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் - பணிகள் பாதிக்கப்பட்டதாக தொழிற்சங்கம் அறிவிப்பு


மின்சார வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம் - பணிகள் பாதிக்கப்பட்டதாக தொழிற்சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Nov 2020 4:15 AM IST (Updated: 5 Nov 2020 4:25 AM IST)
t-max-icont-min-icon

போனஸ் குறைத்து வெளியிட்டதை கண்டிப்பது மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்சார வாரிய ஊழியர்கள் சென்னையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் 3 துணை மின்நிலையங்களை 2 ஆண்டுகளுக்கு பராமரிக்கவும், இயக்கவும் மற்றும் உயர் அழுத்த மின் பாதையை பராமரிக்கவும் தனியாருக்கு விடுவதற்கான நடவடிக்கையை எடுப்பது, 20 சதவீத போனசை 10 சதவீதமாக குறைத்து வெளியிட்டது, நோய் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு அரசு அறிவித்த சலுகைகளை வழங்க மறுப்பது, சரண்டர் விடுப்பு ஓராண்டுக்கு நிறுத்தி வைப்பு, பஞ்சப்படி மறுப்பு ஆகியவற்றை கண்டித்தும், 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி இடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சென்னையில் மின்சார வாரிய தலைமை அலுவலகம் அருகில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஐ.என்.டி.யூ.சி. பொதுச் செயலாளர் சேவியர், தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் தி.ஜெயசங்கர் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினார்கள். பல்வேறு இடங்களில் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும் தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தர்ணா போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட காலங்களிலும், தற்போதைய கொரோனா தொற்றுக் காலத்திலும் பணியாற்றிய மின்வாரிய ஊழியர்கள் அடிப்படை உரிமைகளுக்காக அரசிடம் கையேந்தி நிற்பது வேதனையை அளிக்கிறது. புதிய மின் உற்பத்தித் திட்டங்களில் இருந்த பதவி இடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

துணை மின் நிலையங்களை, ஓய்வு பெற்ற மின்வாரியப் பணியாளர்களைக் கொண்டு இயக்க நடவடிக்கை, தனியார் பராமரிப்பு போன்றவற்றால் மின்சாரத்துறை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுவிடுமோ என்ற ஊழியர்களின் அச்சமும் நியாயமானது. எனவே தமிழக அரசின் மின் உற்பத்தித் திட்டங்கள், மின் பகிர்மானம் மற்றும் பராமரிப்பில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். ஊழியர்களுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள பணிக்கால அடிப்படையிலான ஊதிய உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம், விடுமுறை நாட்களுக்கான ஊதியம் ஆகியவற்றை இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும். அத்துடன் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story