தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பிரபல டி.வி. சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது - அலிபாக் போலீசார் நடவடிக்கை
தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பிரபல டி.வி. சேனல் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை அலிபாக் போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல ரிபப்ளிக் என்ற பிரபல ஆங்கில செய்தி சேனல் நிறுவனத்தின் ஆசிரியராக இருப்பவர் அர்னாப் கோஸ்வாமி. இவர் மும்பை லோயர் பரேலில் வசித்து வருகிறார்.
இவரது டி.வி. சேனல் நிறுவனம் அன்வய் நாயக்(வயது53) என்ற கட்டிட உள்வடிவமைப்பாளருக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 2018-ம் ஆண்டு அன்வய் நாயக் தனது தாயுடன் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக அன்வய் நாயக்கின் மகள் சமீபத்தில் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அர்னாப் கோஸ்வாமியின் டி.வி. சேனல் நிறுவனம் நிலுவை தொகையை வழங்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது தந்தை மற்றும் பாட்டி தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் ராய்காட் மாவட்ட அலிபாக் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர் என்று புகாரில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மறு விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு மராட்டிய உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று காலையில் அலிபாக் போலீசார் மும்பையில் உள்ள அர்னாப் கோஸ்வாமியின் வீட்டுக்கு சென்றனர். வீட்டில் இருந்த அர்னாப் கோஸ்வாமியை போலீசார் அதிரடியாக கைது செய்து வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றி அலிபாக் அழைத்து சென்றனர். வீட்டில் வைத்து கைது செய்யும் போது போலீசார் தன்னை தாக்கியதாக அர்னாப் கோஸ்வாமி வேனில் இருந்தபடி குற்றம்சாட்டினார்.
கைதான அர்னாப் கோஸ்வாமி மீது தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அலிபாக் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டி.வி. சேனல் பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை விசாரணை குறித்த பரபரப்பு செய்தியை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது. இதனால் அந்த செய்தி சேனல் மீது மராட்டிய அரசு அதிருப்தி அடைந்தது. இந்தநிலையில் ரிபப்ளிக் டி.வி. சேனல் டி.ஆர்.பி. ரேட்டிங் முறைகேட்டில் ஈடுபட்டதாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
அர்னாப் கோஸ்வாமியின் கைதுக்கு பா.ஜனதா தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். குறிப்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகையில், காங்கிரஸ் கூட்டணி ஜனநாயகத்தை மீண்டும் கேலிக்கூத்தாக்கி உள்ளது, அவசர நிலையை நினைவுப்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.
மராட்டியத்தில் பத்திரிகை சுதந்திரத்தின் மீது நடந்த இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story