முன்தேதியிட்டு அமலுக்கு வந்தது: ஒரு யூனிட்டுக்கு 40 பைசா அதிகரிப்பு கர்நாடகத்தில் மின்கட்டணம் திடீர் உயர்வு - அரசு அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி
கர்நாடகத்தில் மின்கட்டணத்தை திடீரென்று கர்நாடக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒரு யூனிட்டுக்கு 40 பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்ததாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. இதனால் கர்நாடக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் ஆண்டுதோறும் கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்கட்டணத்தை நிர்ணயம் செய்து வருகிறது.
அதன்படி நடப்பாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் மின்சார கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக மின்சார கட்டண உயர்வு திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது கர்நாடகத்தில் ஒரு யூனிட்டுக்கு 40 பைசா மின்கட்டணத்தை அதிகரித்து கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் மின் வினியோக நிறுவனங்கள், மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 52 முதல் 192 பைசா வரை உயர்த்துமாறு கோரிக்கை விடுத்திருந்தன. அந்த கோரிக்கையை ஏற்று ஒரு யூனிட் மின்சாரத்திற்கு சராசரியாக 40 பைசா உயர்த்த அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ந் தேதி மின் கட்டணம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல், இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் போன்ற காரணங்களால் மின்கட்டண உயர்வு முடிவு அறிவிக்கப்படவில்லை.
தற்போது மின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் அனல் மின் நிலையம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய ஆதாரங்கள் மூலம் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதால் மின் கொள்முதல் செலவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மின் கட்டணம் உயர்வை தவிர்க்க முடியாது. முதலீடு, நிர்வாக செலவுகளுக்காக வாங்கப்படும் கடன் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தே செல்கிறது.
கொரோனா பாதிப்பால் பொருளாதார மண்டலம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த மின் கட்டண உயர்வு கடந்த 1-ந் தேதி முதல் அடுத்த 5 மாதங்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் அக்டோபர் 31-ந் தேதி வரை கட்டண உயர்வு அமல்படுத்தபடாததால் மின் வினியோக நிறுவனங்களுக்கு ரூ.1,443 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிக மின் இணைப்புகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 50 பைசா உயர்த்தப்படுகிறது.
தொழில் நிறுவனங்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு விதிக்கப்பட்டு வந்த ஒரு ரூபாய் அபராதம் வாபஸ் பெறப்படுகிறது. பெங்களூரு உள்பட நகரங்களில் எல்.இ.டி. தெருவிளக்குகளுக்கு வழங்கப்படும் கட்டண சலுகை 100 பைசாவில் இருந்து 105 பைசாவாக உயர்த்தப்படுகிறது. பெங்களூரு மற்றும் புரசபைகளில் வீட்டு உபயோகம், அரசு, கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு 25 பைசா வரை உயர்த்தப்படுகிறது.
அதன்படி 30 யூனிட் வரையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு தற்போது உள்ள கட்டணம் ரூ.3¾-ல் இருந்து ரூ.4 ஆகவும், 31 யூனிட்டில் இருந்து 100 யூனிட் வரையிலான மின்சார பயன்பாட்டிற்கு ரூ.5.20-ல் இருந்து ரூ.5.45 ஆகவும், 101 யூனிட்டில் இருந்து 200 யூனிட் வரையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு ரூ.6.75-ல் இருந்து ரூ.7 ஆகவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. 200 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு தற்போது உள்ள ரூ.7.80-ல் இருந்து ரூ.8.05 ஆக அதிகரிக்கப்படுகிறது.
குடிநீர் வினியோகத்திற்கு பயன்படுத்தப்படும் எல்.டி., எச்.டி. மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 25 பைசா உயர்த்தப்படுகிறது. மின் வினியோக நிறுவனங்களுக்கு ரூ.48 ஆயிரத்து 300 கோடி செலவழிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019-20-ம் ஆண்டில் இந்த மின் வினியோக நிறுவனங்களின் வருவாய் பற்றாக்குறை ரூ.1,837 கோடியாக இருக்கிறது. அத்துடன் நடப்பு ஆண்டில் வருவாய் பற்றாக்குறை மேலும் ரூ.636 கோடி அதிகரிக்கும். மொத்த வருவாய் பற்றாக்குறை ரூ.2,473 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இது அடுத்த ஆண்டில் ஈடு செய்ய வேண்டியுள்ளது.
இவ்வாறு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இடைத்தேர்தல் முடிந்ததும் மின் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு அரசு அதிர்ச்சி கொடுத்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக வேலை வாய்ப்புகளை இழந்து குடும்பத்தை நடத்தவே குடும்ப தலைவர்கள் திண்டாடி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதால், மக்கள் மீதான நிதிச்சுமை மேலும் அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story