காவலர் தேர்வு தடைக்கு முதல்-அமைச்சரே காரணம் - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு


காவலர் தேர்வு தடைக்கு முதல்-அமைச்சரே காரணம் - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Nov 2020 10:00 PM GMT (Updated: 5 Nov 2020 12:19 AM GMT)

காவலர் தேர்வு தடை செய்யப்பட்டதற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியே காரணம் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார். புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி, 

புதுவை காங்கிரஸ் அரசின் கூட்டணியான தி.மு.க. பல்வேறு விஷயங்களில் தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்து மக்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அ.தி.மு.க. அரசு ஆலோசனை செய்து வரும் நிலையில் மாணவர்களின் நலனில் அக்கறை இல்லையா என தி.மு.க. சார்பில் கேட்கப்படுகிறது. புதுச்சேரியில் கடந்த மாதமே அரசு பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்போது இதுபற்றி அவர்கள் வாய் திறக்கவில்லை. ணதமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட நிதி உதவி வழங்கப்படுகிறது. ஆனால் புதுச்சேரியில் நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 11 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த விஷயத்தில் நிதி செயலாளர், முதல்- அமைச்சரும், கவர்னர் கிரண்பெடியும் இணைந்து கபட நாடகம் ஆடுகின்றனர்.

காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வில் காலில் சிப் போட்டுக்கொண்டு ஓட வேண்டும் என்று சட்ட விதிமுறையும், உயர்நீதிமன்றமும் சுட்டிக்காட்டி உள்ளது. இது குறித்து முதல்-அமைச்சருக்கு தெரிந்தும் இந்த தேர்வில் விசில் ஊதி நடத்த திட்டமிட்டனர். காவலர் வேலை வாங்கி தருவதாக பேரமும் பேசி உள்ளனர். முறைகேடு செய்வதற்காகவே காவலர் தேர்வு வரைமுறையை மாற்றியுள்ளனர்.

இதையெல்லாம் பார்க்கும் போது கவர்னர் கிரண்பெடி காவலர் தேர்வுக்கு தடை விதித்து இருப்பதற்கு முதல்- அமைச்சரே காரணம். 6 மாதமாக உடற்தகுதி தேர்வுக்கு பயிற்சி பெற்ற இளைஞர்களின் நலன் கருதி உடனடியாக 2 நாட்களில் காவலர் தேர்வை நடத்த கவர்னர் கிரண்பெடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story