கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் தர்ணா போராட்டம்


கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2020 5:53 AM IST (Updated: 5 Nov 2020 5:53 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று கரூர் கோவை ரோட்டில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட கூட்டுக்குழு சங்க தலைவர் முருகவேல் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.சி.சி.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., டி.எம்.டி.எம்., என்ஜினீயர் சங்கம், ஏ.இ.எஸ்.யூ., ஐக்கிய சங்கம், ஏ.சி.எஸ்.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

அனைவருக்கும் போனஸ்

மின்திட்டங்களில், பணியாற்றி வரும் ஊழியர், பொறியாளர் அலுவலர்களின் பதவிகளை ஒழிக்க கூடாது. துணைமின் நிலையங்களை பராமரிக்க தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. பதவி உயர்வுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் பறிக்க கூடாது. அரசாணை 304-ஐ மின் வாரியத்தில் அமல்படுத்த வேண்டும். மின்ஊழியர்கள், பொறியாளர்கள், அலுவலர்கள், பகுதிநேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர் அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும்.

சரண்டர் லீவுக்கான தொகையை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். கரூர் மின்வட்டத்தில் தொழிற்சங்கங்களுக்கு சங்க அலுவலகம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது.

தோகைமலை

இதேகோரிக்கைகளை வலியுறுத்தி தோகைமலையை சேர்ந்த மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழுவினர் கரூரில் நடந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தோகைமலை மின்வாரிய அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனால் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த நுகர்வோர்கள் தங்களுடைய ஈ.பி. கணக்கினை செலுத்துவதற்காக அலுவலகத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

Next Story