திலாசுப்பேட்டையில் நடந்த பயங்கர சம்பவம்: பெரிய மார்க்கெட் வியாபாரி கொலையில் 2 ரவுடிகள் சிக்கினர் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்


திலாசுப்பேட்டையில் நடந்த பயங்கர சம்பவம்: பெரிய மார்க்கெட் வியாபாரி கொலையில் 2 ரவுடிகள் சிக்கினர் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
x
தினத்தந்தி 5 Nov 2020 4:00 AM IST (Updated: 5 Nov 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

பெரியமார்க்கெட் வியாபாரி கொலையில் 2 ரவுடிகள் போலீசில் சிக்கினர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நண்பரின் கொலைக்கு பழி வாங்க திட்டமிட்டதால் முந்திக் கொண்டு கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல் அம்பலமானது.

புதுச்சேரி,

திலாசுப்பேட்டை வீமன்நகர் கருணாஜோதி வீதியை சேர்ந்தவர் கவுதம் (வயது 22). பெரிய மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மது வாங்குவதற்காக சுப்பையா கல்யாண மண்டபத்தை யொட்டி உள்ள மதுக்கடைக்கு சென்றார்.

அப்போது அவரை அங்கு மறைந்து இருந்த கும்பல் திடீரென பாய்ந்து கவுதமை தாக்கியது. உடனே சுதாரித்துக் கொண்டு அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய அவரை விடாமல் துரத்திச் சென்ற கும்பல் ஓடஓட விரட்டி ஜிப்மர் ஆஸ்பத்திரி அருகே மடக்கிப் பிடித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

ஆள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், இனியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கவுதமை குண்டுபாளையத்தை சேர்ந்த ராம்குமார், ஜீவானந்தபுரத்தை சேர்ந்த தர்மா என்ற தர்மதுரை ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. அதாவது கடந்த 2018-ம் ஆண்டு கோரிமேட்டில் கவுதமின் நண்பரான ஜாக்கி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலையில் தொடர்புடையவர்களாக கருதி போலீசார் ரவுடிகளான குண்டுபாளையம் ராம்குமார், ஜீவானந்தபுரம் தர்மா ஆகியோரை கைது செய்து இருந்தனர். தற்போது இவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். தனது நண்பரான ஜாக்கியை கொலை செய்தவர்களை பழிக்குப்பழி வாங்க கவுதம் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர்களை கண்காணித்தும் வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்த விவரம் தெரியவந்ததையடுத்து தங்களை பழிவாங்கும் முன்பு முந்திக் கொண்டு கவுதமை தீர்த்துக்கட்டுவது என அவர்கள் முடிவு செய்தனர். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக கவுதமின் நடமாட்டத்தை ராம்குமார், தர்மா தரப்பினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அதன்படியே மதுபானம் வாங்க சென்ற கவுதமை நேற்று முன்தினம் இரவு வெட்டிக் கொலை செய்து விட்டு அவர்கள் தலைமறைவானது தெரியவந்தது.

இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்தநிலையில் அவர்களது பிடியில் ராம்குமார், தர்மா ஆகியோர் சிக்கியுள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து கவுதமை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். இந்த விசாரணைக்குப் பின் அவர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கவுதமின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பின் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையொட்டி அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கும் வகையில் திலாசுப்பேட்டை கருணாஜோதி நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story