தீபாவளி பண்டிகையையொட்டி திறப்பு: தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது


தீபாவளி பண்டிகையையொட்டி திறப்பு: தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 5 Nov 2020 12:52 AM GMT (Updated: 5 Nov 2020 12:52 AM GMT)

தீபாவளி பண்டிகையையொட்டி, வருகிற 10-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்கப்படுவதால் திருச்சியில் சுத்தப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது.

திருச்சி, 

கொரோனா தொற்று பரவல் தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளானார்கள்.

ஊரடங்கில் ஒவ்வொரு மாதமும் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்த போது, சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வருவதாலும், கொரோனாவில் வேகம் குறைந்து விட்டதாலும் பாதிப்பில் இருந்து விடுபட தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

10-ந் தேதி முதல் திறப்பு

இந்த நிலையில், கடந்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி பல்வேறு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு, வருகிற 10-ந் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. தீபாவளி பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், 10-ந் தேதியே சினிமா தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது தியேட்டர் உரிமையாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வருகிற தீபாவளிக்கு அதிக அளவிலான புதுப்படங்கள் வெளிவர தயாராக உள்ளன. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களை சுத்தப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் 7 மாத காலத்திற்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால், தூசி படிந்து காணப்படும் இருக்கைகள் சுத்தம் செய்தல், பழுதான இருக்கைகளை மாற்றுவது, சுவர்களுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

திருச்சியில் பராமரிப்பு

திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு தியேட்டர்களின் உரிமையாளர்கள், சினிமா தியேட்டர்களை பராமரிக்கும் பணியினை வேலையாட்களை கொண்டு மேற்கொண்டு வருகிறார்கள். தியேட்டர்களில் ஏ.சி. இயங்குகிறதா? என்றும், அதற்கான எலக்ட்ரீசியன்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி இ.பி.ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று பணியாளர்கள் தியேட்டரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தரையை தண்ணீர் விட்டு கழுவி சுத்தம் செய்ததுடன், இருக்கைகளையும் சுத்தம் செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் சினிமா தியேட்டரின் புரொஜக்டர் அறையில் உள்ள புரொஜக்டர் உள்ளிட்ட கருவிகளை உரிய முறையில் பராமரித்தும், அவற்றை திரையில் சோதனை முறையில் ஓடவிட்டும் பார்த்தனர்.

வழிகாட்டும் நெறிமுறைகள்

மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதற்காக ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணியும் நடைபெற்று வருகின்றன. தியேட்டர்களை திறப்பது தொடர்பாக ஏற்கனவே மத்திய, மாநில அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தியேட்டர்களை திறக்க உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story