திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் தேசியக்கொடி நிரந்தரமாக பறந்திட 100 அடி உயர கம்பம் அமைப்பு


திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் தேசியக்கொடி நிரந்தரமாக பறந்திட 100 அடி உயர கம்பம் அமைப்பு
x
தினத்தந்தி 5 Nov 2020 12:58 AM GMT (Updated: 5 Nov 2020 12:58 AM GMT)

திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் நிரந்தரமாக தேசியக்கொடி பறந்திட 100 அடி உயர கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருச்சி பன்னாட்டு விமான நிலைய வளாகத்தில் 100 அடி உயர கம்பத்தில் இந்திய தேசியக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அதுபோல திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள பூங்காவில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடியை நிரந்தரமாக பறக்க விடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

அதற்காக டிரைலர் லாரி ஒன்றில், நேற்று 100 அடி உயர கம்பம் அமைப்பதற்காக 2 டன் எடையுள்ள இரும்பு குழாய் கொண்டு வரப்பட்டது. அக்குழாய் ராட்சத கிரேன் மூலம் ரெயில் நிலைய வளாகத்தில் நிலை நிறுத்தப்பட்டது. அவற்றில் மதிப்பு ரூ.10 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்பட்டது. 100 அடி உயரமான கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடியானது 20-க்கு 30 அளவில் அமைகிறது.

எலக்ட்ரிக் பணிகள்

கம்பம் நிலை நிறுத்தப்பட்டதும், அங்கு எலக்ட்ரிக் பணிகள் எலக்ட்ரீசியன்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இரவு நேரத்தில் தேசியக்கொடி ஒளிரும் வகையில் கம்பத்தின் அருகில் இருபுறங்களில் தலா 15 அடி உயரத்தில் போக்கஸ் லைட் அமைக்கப்பட்டுள்ளது.

ரெயில்வே கோட்ட அதிகாரிகள், ஓரிரு நாளில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடியை ஏற்றி வானில் நிரந்தரமாக பட்டொளி வீசி பறக்கவிட்டு அர்ப்பணிக்க இருப்பதாக ரெயில்வே ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Next Story