தமிழக சட்டசபை தேர்தலில் காவிரி டெல்டா பகுதியில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம்
தமிழக சட்டசபை தேர்தலில் காவிரி டெல்டா பகுதியில் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று பா.ஜனதா கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
குடவாசல்,
பா.ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட பிற்பட்டோர் நல அணி செயற்குழு கூட்டம் குடவாசலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் வக்கீல் சிவசங்கரன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணி செயலாளர் கோவி சந்துரு, மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், சிவபிரபாகரன், எஸ்.ஆர்.கண்ணன், ஒன்றிய தலைவர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் சரவணன், நாகை மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை சிவா, திருவாரூர் மாவட்ட செயலாளர் கோட்டூர் ராகவன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
பிரதமர் படம்
இந்து சனாதன தர்மத்தை கொச்சைப்படுத்திய திருமாவளவனின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்ட சபை தேர்தலில் காவிரி டெல்டா பகுதியில் பா.ஜனதா சார்பில் அதிக இடங்களில் போட்டியிட கட்சி தலைமையை கேட்பது, வெற்றிவேல் வீரவேல் யாத்திரை திருவாரூர் மாவட்டத்துக்கு வருகிற 25-ந் தேதி(புதன்கிழமை) வரும் போது சிறப்பாக வரவேற்பு அளிப்பது, மத்திய- மாநில அரசு அலுவலகங்களில் பாரத பிரதமரின் புகைப்படத்தை ஒரு மாதத்துக்குள் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அமைப்பு சாரா அணி செயலாளர் ராஜசேகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் மதுசூதனன், குடவாசல் ஆனந்த், ஒன்றிய மகளிர் அணி தலைவர் காயத்ரி ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குடவாசல் தெற்கு ஒன்றிய பிற்பட்டோர் நல அணி தலைவர் முத்துகுமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story