மின்வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தஞ்சையில், ஊழியர்கள் தர்ணா போராட்டம்


மின்வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தஞ்சையில், ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2020 8:20 AM IST (Updated: 5 Nov 2020 8:20 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய தலைவரின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தஞ்சையில் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டம் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது. போராட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மின் வாரிய தொழிற்சங்க சம்மேளன துணைத்தலைவர் பொன்.தங்கவேல் தலைமை தாங்கினார்.

சி.ஐ.டி.யூ. மின்வாரிய துணைத்தலைவர் ராசாராம், மின் வாரிய பொறியாளர் சங்க கூட்டமைப்பு தலைவர் சுந்தர்ராஜ், ஐ.என்.டி.யூ.சி. மின்வாரிய திட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொ.மு.ச. மாநில அமைப்புச் செயலாளர் ஆண்ட்ரூ கிறிஸ்டி தொடங்கி வைத்தார். போராட்டத்தில் நீலமேகம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார்.

42 ஆயிரம் காலிப்பணியிடம்

போராட்டத்தில் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான பங்கஜ் குமார் பன்சால் பதவியேற்ற நாளிலிருந்து தொழிற்சங்கத்தின் தலைவர்களை சந்திக்க மறுப்பதுடன், தொழிலாளர் மற்றும் துறைசார்ந்த பிரச்சினைகளை தீர்க்க தவறுவதுடன், தன்னிச்சையாக செயல்படுதை கணடித்தும், ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்தில் வங்கி ஊழியர் சங்கம் மாவட்ட பொதுச்செயலாளர் அன்பழகன், அரசு போக்குவரத்து ஏ.ஐ.டி.யூ.சி. சம்மேளனத்தின் துணைத்தலைவர் துரை.மதிவாணன். ஐ.என்.டி.யூ.சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பு தலைவர் கணேசன், மற்றும் மின் வாரிய சங்க நிர்வாகிகள் அப்பர்சுந்தரம், காணிக்கை ராஜ், பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.

Next Story