தொற்றுநோய் பரவும் அபாயம்: பண்டிகை காலங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
பண்டிகை காலங்களில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தர்மபுரி கலெக்டர் கார்த்திகா அறிவுறுத்தியுள்ளார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கார்த்திகா தலைமை தாங்கினார். தர்மபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் இளங்கோவன், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் திலகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜெமினி, குடும்பநல துணை இயக்குனர் ராஜலட்சுமி, தொழுநோய் துணை இயக்குனர் புவனேஸ்வரி, காசநோய் துணை இயக்குனர் ராஜ்குமார், மகப்பேறு மருத்துவர் மலர்விழி ஆகியோர் உள்ளிட்ட மருத்துவம் மற்றும் பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனை, 3 வட்டார மருத்துவமனைகள், ஒரு தொழுநோய் மருத்துவமனை, 9 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 41 கூடுதல் ஆரம்ப சுகாதாரநிலையங்கள், ஒரு நகர ஆரம்ப சுகாதார நிலையம், 225 துணை ஆரம்ப சுகாதாரநிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் சுகாதார சேவைகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் மற்றும் பிற இதர நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.தேவைக்கேற்ப கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தயார் நிலையில் மாவட்ட நிர்வாகம் உள்ளது.
ஒத்துழைக்க வேண்டும்
தற்போது பண்டிகை காலங்கள் நெருங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும் இருக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் கொரோனா நோய் தொற்று எப்படி கட்டுக்குள்ளிருந்ததோ அதேபோன்று நோய் தொற்று பரவலை தடுக்க மருத்துவத்துறை பணியாளர்களும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி கொண்டு கை கழுவுதல் உள்ளிட்ட அரசு வழிக்காட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
Related Tags :
Next Story