திருப்பூர், பல்லடத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா
திருப்பூர் மற்றும் பல்லடத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
தமிழ்நாடு மின்வாரிய தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு திருப்பூர் கிளை சார்பில் தர்ணா போராட்டம் நேற்று காலை திருப்பூர் குமார் நகரில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தொடங்கியது. இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. மாநகர செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டியுசி., எல்.பி.எப்., எம்.எல்.எப். உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மின் திட்டங்களில் பணியாற்றிவரும் ஊழியர், பொறியாளர், அலுவலர்களின் பதவிகளை ஒழிக்கக் கூடாது.
துணை மின் நிலையங்களை பராமரிப்பதை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. பதவி உயர்வுகளையும், புதிய வேலை வாய்ப்புகளையும் பறிக்கக்கூடாது. காலிப்பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும் என்பது உள்பட மின் வாரிய தலைவரின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாலை 5 மணி வரை அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
பல்லடம்
தமிழகத்தில் மின் வாரியத்தில் காலியாக உள்ள 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 ஊதியம் அளித்து பணி வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். மின் உற்பத்தி மற்றும் துணை மின் நிலையங்களை தனியார் மயமாக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடத்தில் மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் (எலக்ட்ரிசிட்டி போர்டு எம்ப்ளாயீஸ் பெடரேஷன்) சங்கத்தின் பல்லடம் மின்பகிர்மான வட்ட கிளை பொருளாளர் ஜான்சன் சாமுவேல் தலைமை வகித்தார்.
இதில் சங்கத்தின் பல்லடம் கிளைத் தலைவர் அங்குராஜ், செயலாளர் கந்தசாமி, ராமசந்திரன் (ஐக்கிய சங்கம்), ராமலிங்கம் (சி.ஐ.டி.யு), உத்திரகுமார் (தொ.மு.ச.), சுரேஷ்ராஜ் (பொறியாளர் சங்கம்), முத்துசாமி (சம்மேளனம்) மற்றும் பல்லடம், காங்கேயம், தாராபுரம் மின் வாரிய அலுவலகங் களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story