மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்


மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2020 2:35 PM IST (Updated: 5 Nov 2020 2:35 PM IST)
t-max-icont-min-icon

மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி,

தேனி மாவட்டத்தில் மலைமாடுகளுக்கு மேய்ச்சல் அனுமதிச்சீட்டு வழங்க வலியுறுத்தி மலைமாடுகளுடன் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கர்னல் ஜான் பென்னிகுவிக் பாரம்பரிய மலைமாடுகள் வளர்ப்போர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் முத்தரப்பு பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் உடன்பாடுகள் எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து 2-வது நாளாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் மலைமாடுகள் வளர்ப்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடந்தது. இதற்காக நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருந்தனர். 10 பேர் மட்டும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்

மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில், மாவட்ட வன அலுவலர் கவுதம், மேகமலை வன உயிரின காப்பாளர் போஸ்லின் சச்சின் துக்காராம் மற்றும் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். சுமார் 3½ மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு விவாதங்கள் நடத்தப்பட்டன. ஆனால், முடிவு எதுவும் எட்டப்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு விவசாயிகள் சிலர், மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது தொடர்பாக தங்களுக்கு தெளிவான உத்தரவு கிடைத்தால் தான் அங்கிருந்து புறப்படுவோம் என்று கூறி திடீரென தரையில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களிடம் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து சங்க பொதுச்செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறுகையில், “மலைமாடுகள் பாரம்பரிய இனத்தை சேர்ந்தவை. அதை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. அதை பாதுகாக்க அனைத்து மாடுகளுக்கும் மேய்ச்சல் அனுமதிச்சீட்டு கேட்டோம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. பாதி எண்ணிக்கையிலாவது அனுமதிச்சீட்டு கேட்டோம். அதையும் கொடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை. இதுதொடர்பாக ஐகோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் எங்களையும் இணைத்துக் கொண்டு வழக்கை துரிதப்படுத்தி நல்ல தீர்ப்பை பெறுவோம். அதுவரை மலைமாடுகளை மலைப்பகுதிகளுக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வோம். வனத்துறையினர் தடுத்தால் அந்த பிரச்சினையை எதிர்கொள்வோம்” என்றார்.

Next Story