கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்


கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 Nov 2020 8:53 PM IST (Updated: 5 Nov 2020 8:53 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். அப்போது பெரியாறு கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தினார்கள்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட விவசாயத்திற்கு பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்க மறுக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சமையல் செய்து சாப்பிட்டு காத்திருக்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர். வைகை-பெரியாறு அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, சிங்கம்புணரி, திருப்பத்தூர், காளையார் கோவில் உள்ளிட்ட 4 தாலுகாக்களில் உள்ள 129 கண்மாய்களுக்கு 5 கால்வாய்கள் மூலம் தண்ணீர் வழங்கப்படும். இதன்மூலம் 19 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும்.

கடந்த சில ஆண்டுகளாக பெரியாறு அணை முழு கொள்ளளவை அடைந்த போதும் கடைமடை பகுதியான சிவகங்கை மாவட்டத்திற்கு இதுவரையிலும் உரிய பங்கீட்டு அளவு தண்ணீர் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு பெய்த மழையின் காரணமாக கண்மாய்களில் உள்ள சிறிதளவு தண்ணீரை கொண்டு விவசாயிகள் முதல்கட்ட விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். இதனால் இந்த ஆண்டு பாசனத்திற்காக பெரியாறு கால்வாய் பங்கீடு தண்ணீரை திறக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பாஸ்கரன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய பங்கீட்டு தண்ணீரை கொடுப்பதாக பெரியாறு பாசன திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதன் பின்னர் தண்ணீரை வழங்கவில்லை.

இதனால் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு தண்ணீர் கிடைக்கும் வரை சமைத்து சாப்பிட்டு விட்டு காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் போராட்டம் தொடங்கியது.

போராட்டத்துக்கு பெரியாறு பாசன 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை தாங்கினார். போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. அருணகிரி, முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரெத்தினம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் அன்வர்பாலசிங்கம், முத்துராமலிங்கம், தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன் மற்றும் வக்கீல் கிருஷ்ணன், கார்கண்ணன் சுந்தரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து பொதுப்பணி துறை நிர்வாக பொறியாளர் கமலகண்ணன், உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் பெரியாறு பாசன திட்ட செயற்பொறியாளர் வந்து பேசி தண்ணீர் திறந்தால் மட்டுமே போராட்டம் விலக்கி கொள்ளப்படும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து சாமியானா பந்தல் அமைத்து அதில் அவர்கள் அமர்ந்து இருந்தனர்.

அதன்பிறகு கலெக்டர் ஜெயகாந்தன் போராட்டம் நடத்திய விவசாய பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பெரியாறு கால்வாயில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தை கைவிடுமாறு கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார். அதை தொடர்ந்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்து உள்ளனர்.

Next Story