ஓய்வூதியம் வாங்கி தருவதாக மூதாட்டியிடம் நகை ‘அபேஸ்’ மர்மநபருக்கு வலைவீச்சு


ஓய்வூதியம் வாங்கி தருவதாக மூதாட்டியிடம் நகை ‘அபேஸ்’ மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Nov 2020 3:00 AM IST (Updated: 5 Nov 2020 11:41 PM IST)
t-max-icont-min-icon

முதியோர் ஓய்வூதியம் வாங்கி தருவதாக மூதாட்டியிடம் 3 பவுன் நகை ‘அபேஸ்‘ செய்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திசையன்விளை,

திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் ராமசாமி நாடார். இவருடைய மனைவி சுயம்புகனி (வயது 63). ஓய்வுபெற்ற ஊட்டச்சத்து அமைப்பாளர்.

சம்பவத்தன்று இவர் திசையன்விளை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரிடம் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நைசாக பேச்சு கொடுத்து, முதியோர் ஓய்வூதியம் வாங்கி தருவதாக கூறி ஒரு விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து வாங்கினார். பின்னர் கட்டணமாக ரூ.300 கேட்டார். அப்போது அவர், தன்னிடம் 500 ரூபாயாக தான் இருக்கிறது என்று கூறினார். இதையடுத்து அந்த நபர், அந்த பணத்தை வாங்கி சென்று அருகில் உள்ள கடையில் மாற்றி, ரூ.300-ஐ எடுத்துக்கொண்டு மீதி ரூ.200-ஐ மூதாட்டியிடம் திருப்பி கொடுத்தார்.

அதன்பிறகு முதியோர் உதவித்தொகை பெற வேண்டும் என்றால் நகை அணிந்து இருக்கக்கூடாது என்று கூறி அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து நைசாக தப்பிச் சென்று விட்டார்.

அதன்பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுயம்புகனி, இதுகுறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஓய்வூதியம் வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை ‘அபேஸ்‘ செய்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Next Story