அடுக்குமாடி குடியிருப்பில் ‘வாஷிங்மெஷினில்’ மின்கசிவால் தீ விபத்து
அடுக்குமாடி குடியிருப்பில் ‘வாஷிங்மெஷினில்’ ஏற்பட்ட மின்கசிவால் வீட்டின் சமையல் அறையில் தீப்பிடித்து எரிந்தது. இதில் அங்கிருந்த பொருட்கள் நாசமாயின.
பெரம்பூர்,
சென்னை கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி மெயின் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் முதல் மாடியில் சரவணன் (வயது 35) என்பவர் தனது மனைவி நிரோஷினி மற்றும் குழந்தையுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். சரவணன் செல்போன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று இவரது வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண், சமையல் அறையில் உள்ள ‘வாஷிங்மெஷினில்’ துணிகளை போட்டு சுவிட்ச்சை ஆன் செய்தார். அப்போது அவரை மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். ஆனால் இதில் அவருக்கு எந்த காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
ஆனால் சிறிது நேரத்தில் ‘வாஷிங்மெஷினில்’ இருந்து கரும்புகை வெளியேறியது. திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வேலைக்கார பெண் மற்றும் வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்துவிட்டனர்.
தீ மளமளவென சமையல் அறை முழுவதும் பரவியது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த சத்தியமூர்த்தி நகர், கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் வீட்டின் சமையல் அறையில் இருந்த பொருட்கள் மட்டும் தீயில் எரிந்து நாசமானது. ‘வாஷிங்மெஷினில்’ ஏற்பட்ட மின்கசிவே தீவிபத்துக்கு காரணம் என தெரிந்தது. இதுபற்றி கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story