அறிவாற்றலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு, கவர்னர் வஜூபாய் வாலா வேண்டுகோள்


அறிவாற்றலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு, கவர்னர் வஜூபாய் வாலா வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 Nov 2020 2:32 AM GMT (Updated: 6 Nov 2020 2:32 AM GMT)

அறிவாற்றலை சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களுக்கு கவர்னர் வஜூபாய் வாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெலகாவி, 

பெலகாவி விஸ்வேசுவரய்யா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் சார்பில் கல்வியில் இந்தியாவின் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதை கவர்னர் வஜூபாய் வாலா தொடங்கி வைத்து பேசியதாவது:-

சமுதாயத்திற்கு நல்லது நடக்கும் மற்றும் அனைத்து நிலையிலும் அறிவாற்றலை வளர்க்கும் பணி நடைபெற வேண்டும். முக்கியமாக மாணவர்கள் தாங்கள் பெற்ற அறிவாற்றலை இந்த சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். இதில் ஆசிரியர்களின் பங்கு மிக முக்கியமானது. மாணவர்களுக்கு தாங்கள் எதற்காக படிக்கிறோம், அதை எதற்காக பயன்படுத்த வேண்டும், பெற்ற அறிவாற்றலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

இவ்வாறு வஜூபாய் வாலா பேசினார்.

இறுதிக்கட்ட பரிந்துரைகள்

இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் இருந்தபடி காணொலி மூலம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தேசிய கல்வி கொள்கை குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.வி.ரங்கநாத் தலைமையில் ஒரு செயல்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த செயல்படை ஆரம்ப கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இறுதிக்கட்ட பரிந்துரைகளை அந்த செயல்படை 7-ந் தேதி (நாளை) தாக்கல் செய்ய உள்ளது. பிற மாநிலங்களை விட தேசிய கல்வி கொள்கை கர்நாடகத்தில் படிப்படியாக விரைவாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

6 ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள் மற்றும் 10 கற்பித்தல் பல்கலைக்கழகங்களை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 34 கல்வி நிலையங்களுக்கு நிகர்நிலை அந்தஸ்து வழங்கப்படும். சமுதாயத்தில் இருக்கும் சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது எங்களின் நோக்கம். கல்வி நிலையங்களில் இதுவரை பாடத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் இல்லாத விஷயங்களுக்கு தொடர்பே இல்லாமல் இருந்தது.

விளையாட்டு

இனி அத்தகைய நிலை இருக்காது. பாடத்திட்டம் அல்லாத வளையத்தில் இருந்த விளையாட்டு, கலை, இசை உள்ளிட்ட அம்சங்களும் பாடத்திட்டத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு திறன்களுடன் முன்னேற்றம் அடைவார்கள். நாட்டின் நலன் கருதியும், மாணவர்களின் எதிர்காலம் கருதியும் இந்த தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story