ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து வலங்கைமான் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து வலங்கைமான் ஒன்றியக்குழு கூட்டத்தில் இருந்து தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வலங்கைமான்,
வலங்கைமான் ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய மன்ற அவை கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.சங்கர் தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு துணைத்தலைவர் வாசுதேவன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சாந்தி தேவராஜன், ஒன்றிய ஆணையர் கமலராஜன், ஒன்றிய திட்ட ஆணையர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பிரபாகரன், செல்வி, அன்பரசன், கவிதா, மாலதி, ராஜேஸ்வரி, காந்திமதி, ரசூல் நஸ்ரின், தாமரை செல்வன், கீதா, சீதாலட்சுமி, விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மருத்துவ படிப்புக்கு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர் காமராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் துரைக்கண்ணு மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் கொரோனா வைரஸ் கிராம பகுதிகளில் பரவாமல் தடுக்கும் பணியில் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
பின்னர் ஒன்றியக்குழு தி.மு.க. உறுப்பினர் அன்பரசன் பேசுகையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து 10 மாதங்கள் ஆகிறது. ஆனால் நமக்கு வாக்களித்த கிராமப்புற மக்களுக்கு எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியவில்லை. 15-வது நிதிக்குழு மானியத்தில் கிராம சாலைகள் பராமரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பணிகளும் மேற்கொள்ளவில்லை.
ஊராட்சிகளுக்கு தமிழக அரசு அடிப்படை பணிகளை நிறைவேற்ற எந்த நிதியையும் ஒதுக்கவில்லை. இதுகுறித்த நிலைப்பாட்டை ஒன்றிய நிர்வாகம் விளக்க வேண்டும் என்றார். இதை தொடர்ந்து தமிழக அரசு ஊராட்சிகளுக்கு அடிப்படை பணிகளை நிறைவேற்ற நிதி ஒதுக்காததை கண்டித்து தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தில் வெளிநடப்பு செய்தனர்.
ரூ.1½ கோடி
இதையடுத்து ஒன்றியக்குழு தலைவர் சங்கர் பேசுகையில், தமிழக அரசு கொரோனா வைரஸ் பரவலை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. வலங்கைமானில் அனைத்து ஊராட்சிகளிலும் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகிறது. ஊராட்சிகளுக்கு நிதி வழங்கப்படாமல் இல்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக 50 ஊராட்சிகளுக்கும் ரூ.1½ கோடி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story