மகள் திருமணம் நடக்க இருந்த நிலையில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் விவசாயி பிணம் மீட்பு


மகள் திருமணம் நடக்க இருந்த நிலையில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் விவசாயி பிணம் மீட்பு
x
தினத்தந்தி 6 Nov 2020 11:21 AM IST (Updated: 6 Nov 2020 11:21 AM IST)
t-max-icont-min-icon

மகள் திருமணம் நடக்க இருந்த நிலையில் விவசாயி ரெயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

பத்மநாபபுரம், 

குமரி மாவட்டம் திக்கணங்கோடு புதூர் ஆசாரிவிளையை சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 55), விவசாயி. இவருக்கு கலா என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். காசிலிங்கம் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தார்.

இதனை தொடர்ந்து அழகியமண்டபம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், அவருடைய மகளுக்கும் திருமணம் செய்வதாக பேசி முடிவு செய்யப்பட்டது. அதன்படி வருகிற 11-ந் தேதி திருமணம் நடக்க இருந்தது. இதற்காக திருமண ஏற்பாடுகளில் இருவீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டனர்.

மாயம்

காசிலிங்கம் மகளின் திருமண அழைப்பிதழை உறவினர்களுக்கு கொடுப்பதற்காக தினமும் காலையில் வீட்டில் இருந்து புறப்படுவதும், இரவில் வீடு திரும்பவதும் என கடந்த சில நாட்களாக வழக்கமாக வைத்திருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் காலை அழைப்பிதழ் கொடுக்க சென்ற காசிலிங்கம், இரவு வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர்.

தண்டவாளத்தில் பிணம்

இந்த நிலையில் நேற்று காலை நாகர்கோவில்-திருவனந்தபுரம் வழித்தடத்தில் புதூர்-வாழோடுக்கு இடையே தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் ஒரு ஆணின் பிணம் கிடந்தது.

இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனே, இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே காசிலிங்கம் குடும்பத்தினரும் விரைந்து வந்து பார்த்தனர். பிணமாக கிடந்தது, காசிலிங்கம் தான் என்பதை உறுதி செய்ததோடு கதறி அழுதனர்.

தொடர்ந்து நாகர்கோவில் போலீசார் காசிலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டவாளத்தை கடக்க முயன்ற போது காசிலிங்கம் ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகளின் திருமணம் நடக்க இருந்த நிலையில் விவசாயி உடல் தண்டவாளம் பகுதியில் சிதைந்த நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story