ஈரோட்டில், போலீஸ் நிலையத்தின் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு


ஈரோட்டில், போலீஸ் நிலையத்தின் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு
x

ஈரோட்டில், போலீஸ் நிலையத்தின் மொட்டை மாடியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு, 

ஈரோடு பெரியார் நகரில் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மதியம் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வந்தார். பின்னர் அவர் அருகில் இருந்த அலுவலக மாடி படிக்கட்டில் அமர்ந்து கொண்டு தனக்கு தானே பேசிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் அவரிடம், இங்கிருந்து வெளியே செல்லும்படி கூறி உள்ளனர். ஆனால் அந்த நபர் செல்லாமல் அங்கேயே அமர்ந்து கொண்டு தனக்கு தானே பேசிக்கொண்டு இருந்தார். வழக்கு விசாரணைக்காக போலீசார் அனைவரும் வெளியே சென்று விட்டனர். காவலுக்கு ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவர் மட்டும் இருந்துள்ளார். இந்த நிலையில் மாடி படிக்கட்டில் அமர்ந்திருந்த அந்த நபர் திடீரென மொட்டை மாடிக்கு சென்று பின்னர் அங்கிருந்து கீழே குதிக்க போவதாக மிரட்டல் விடுத்தார்.

பரபரப்பு

இதைப்பார்த்த பொதுமக்கள் இதுபற்றி ஈரோடு தீயணைப்பு துறை மற்றும் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த நபரை மொட்டை மாடியில் இருந்து கீழே இறங்கும்படி கூறினர். ஆனால் அந்த நபர் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்துக்கொண்டு இருந்தார். இதற்கிடையே பேச்சுக்கொடுத்து கொண்டே தீயணைப்பு துறையினர் மாடிப்படிக்கு நைசாக சென்று அந்த நபரை பிடித்து கீழே கொண்டு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர், ஈரோடு பெரியார் நகரை சேர்ந்த செந்தில் (40) என்பதும், இவர் கடந்த சில நாட்களாக லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பேசி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செந்திலை அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் பெரியார்நகர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story