கோபி பகுதியில் இடி- மின்னலுடன் கொட்டித்தீர்த்த கன மழை 300 ஏக்கரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியது
கோபி பகுதியில் இடி, மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழையால் 300 ஏக்கர் பரப்பளவிலான நெல்பயிர்கள் நீரில் மூழ்கின.
ஈரோடு,
கோபி பகுதியில் கடந்த சிலதினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் கோபி பகுதியில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்த நிலையில் கோபி, மொடச்சூர், பா.நஞ்சகவுண்டம்பாளையம், கரட்டூர், பா.வெள்ளாளபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை 2 மணிக்கு இடி, மின்னலுடன் கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை காலை 6.30 மணி வரை நீடித்தது.
நெல்பயிர்கள் நீரில் மூழ்கியது
இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கோபி நகரின் நடுவில் உள்ள கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அதுமட்டுமின்றி பா.நஞ்சகவுண்டம்பாளையத்தில் 5 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் சாணார்பதி, முருகன்புதூர் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாரியூர் வழியாக செல்லும் தடப்பள்ளி வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அதிகப்படியான தண்ணீர் அங்கிருந்து வெளியேறி அந்த பகுதியில் உள்ள 300 ஏக்கர் பரப்பளவிலான வயல்களில் புகுந்தது. இதன்காரணமாக அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
பவானிசாகர்- ஊஞ்சலூர்
கோபி கரட்டூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையிலும் மழைநீர் புகுந்தது. வெள்ளம் வடிந்த பின்னர் போக்குவரத்து கழக பணிமனை சேறும் சகதியுமாக காணப்பட்டது.
கோபி பகுதியில் நேற்று 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இதேபோல் பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதன்காரணமாக பவானிசாகர் பகுதியில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. மேலும் நேற்று மாலை 5.30 மணி முதல் 5.50 மணி வரை பவானிசாகர் பகுதியில் மிதமான மழை பெய்தது.
பவானிசாகரில் 10.6 மில்லி மீட்டர் மழை பதிவானது.
ஊஞ்சலூர், கொளாநல்லி, தாமரைப்பாளையம், கொளத்துப்பாளையம், பனப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை 20 நிமிடம் நீடித்தது.
சென்னிமலை
சென்னிமலை பகுதியில் நேற்று மாலை 3 மணி முதல் 3.30 மணி வரை பெய்ததது.
இதன்காரணமாக கே.ஜி.வலசு வழியாக நத்தக்காடையூர் செல்லும் ரோட்டில் உப்பிலிபாளையம் கிராமத்தில் உள்ள ஓடை நிரம்பி அங்குள்ள தார் ரோட்டில் சென்றது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். அதுமட்டுமின்றி அந்த பகுதியில் உள்ள நெல் வயல்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
சத்தியமங்கலம்- கொடுமுடி
சத்தியமங்கலத்தை அடுத்த சிக்கரசம்பாளையம் பகுதியில் மதியம் 1 மணி முதல் 1.30 மணி வரையும், கொடுமுடி, பெரியவட்டம், சோளக்காளிபாளையம், சாலைப்புதூர், தாமரைப்பாளையம் ஆகிய பகுதிகளில் நேற்று காலை 5.30 மணி முதல் 6.30 மணி வரையும், அறச்சலூர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
Related Tags :
Next Story