நத்தம் அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் போலீசுக்கு பயந்து - தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


நத்தம் அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் போலீசுக்கு பயந்து - தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 6 Nov 2020 3:17 PM IST (Updated: 6 Nov 2020 3:17 PM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே வாலிபரை கொலை செய்த வழக்கில் போலீசுக்கு பயந்து தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நத்தம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் ஸ்ரீகாந்த் (வயது18). இவர் சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் விடுமுறையில் ரெட்டியபட்டிக்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஊருக்கு ஒதுக்குபுறமாக ஸ்ரீகாந்த் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது பற்றி தகவலறிந்த நத்தம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக ரெட்டியபட்டியில் ஸ்ரீகாந்தின் நண்பர்கள், உறவினர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தி வந்தனர். ஆனாலும் ஸ்ரீகாந்த்தை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளியான கண்ணன் என்ற ராமச்சந்திரன்(33) நேற்று ஒரு மாமரத்தில் தூக்குப்போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதை அக்கம்பக்கத்தினர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டதற்கும், ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொலை செய்யப்பட்ட ஸ்ரீகாந்திற்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு இருந்தது. இதில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீகாந்த்தை ராமச்சந்திரன் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். இந்த வழக்கில் போலீசார் துரித நடவடிக்கை எடுத்து தன்னை பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் ராமச்சந்திரன் அங்குள்ள ஒரு மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்களால் ரெட்டியபட்டி கிராமமே அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.

Next Story