தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் கடத்தி கால்வாயில் வீசப்பட்டார் - 2 பேர் கைது


தேசியவாத காங்கிரஸ் பிரமுகர் கடத்தி கால்வாயில் வீசப்பட்டார் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2020 4:00 AM IST (Updated: 7 Nov 2020 4:17 AM IST)
t-max-icont-min-icon

தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர் கடத்தி கால்வாயில் வீசப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவரது கதி என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை,

மும்பை போரிவிலி சிவ்சாகர் சொசைட்டியை சேர்ந்தவர் மணிஷ். தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரமுகர். இவர் காணமல் போய்விட்டதாக கூறி மணிஷின் மனைவி அண்மையில் போலீசில் புகார் கொடுத்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் மர்ம நபர்கள் 2 பேர் அவரை ஆட்டோவில் கடத்தி செல்வது பதிவாகி இருந்தது. இதைவைத்து போலீசார் விசாரணை நடத்தியதில் மணீசை கடத்தி சென்றது மகேஷ் குட்டே(வயது29), தினேஷ் மெக்ரா(46) ஆகியோர் என்பதும், அவர்கள் அகமது நகர் மாவட்டம் சங்கம்நேர் தாலுகாவில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.

அதாவது சம்பவத்தன்று மணீசை ஆட்டோவில் கடத்தி சென்ற இருவரும், பின்னர் அவரை வலுக்கட்டாயமாக மது அருந்த செய்து, தானே மாவட்டத்தில் உள்ள கல்வா கழிமுக கால்வாயில் அவரை தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர் என்பது தெரியவந்தது. இதற்கான காரணம் தெரியவரவில்லை.

இதையடுத்து கல்வா கழிமுக கால்வாய் பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு மணீசை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story