லாரி சக்கரத்தில் சிக்கி சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி பலி


லாரி சக்கரத்தில் சிக்கி சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி பலி
x
தினத்தந்தி 7 Nov 2020 4:00 AM IST (Updated: 7 Nov 2020 4:45 AM IST)
t-max-icont-min-icon

கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி சக்கரத்தில் சிக்கி, சென்னை மாநகராட்சி பெண் அதிகாரி பலியானார்.

தாம்பரம், 

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேந்தர்குமார் (வயது 35). தனியார் கார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி மோனிஷா (29). இவர், சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட 165-வது பிரிவு ஆதம்பாக்கம் சுகாதார அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று காலை மோனிஷா, தன்னுடன் பணிபுரியும் சுகாதார ஆய்வாளரான மணிகண்டன் (33) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்து கொண்டிருந்தார்.

புதுபெருங்களத்தூரில் ஜி.எஸ்.டி. சாலையில் வந்தபோது வலதுபுறம் பஸ் வந்ததால் இடதுபுறத்தில் ஓரமாகச் செல்ல தன் இருசக்கர வாகனத்தை மணிகண்டன் திருப்ப முயன்றார்.

அப்போது அவர்களுக்கு பின்னால் படாளத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி கியாஸ் சிலிண்டர் ஏற்றிவந்த லாரி, இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருவரும் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர்.

இதில் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கிய மோனிஷா, சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். மணிகண்டனுக்கு வலது தோள்பட்டையில் எலும்பு முறிவும், முகத்தில் பலத்த காயமும் ஏற்பட்டது. இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான நாகப்பட்டினம் மாவட்டம், அம்மன் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story