கண்காணிப்பு கேமராவில் ‘ஸ்பிரே’ அடித்து விட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி - அலாரம் ஒலித்ததால் தப்பி ஓட்டம்
கண்காணிப்பு கேமராவில் ‘ஸ்பிரே’ அடித்து விட்டு ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்மநபர்கள், அலாரம் ஒலித்ததால் தப்பி ஓடிவிட்டனர்.
பூந்தமல்லி,
சென்னை மதுரவாயலை அடுத்த வானகரம், போரூர் கார்டன் பகுதியில் ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் இந்த ஏ.டி.எம். மையத்துக்குள் நுழைந்தனர்.
அதில் ஒருவர், ஏ.டி.எம். மையம் மற்றும் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் தங்களின் முகம் பதிவாகாமல் இருக்க கையில் கொண்டு வந்த ‘ஸ்பிரே’யை அடித்தார். பின்னர் இருவரும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.
அப்போது ஏ.டி.எம். மையத்தில் உள்ள பாதுகாப்பு அலாரம் ஒலித்தது. அதே நேரத்தில் ஐதராபாத்தில் உள்ள அந்த வங்கியின் தலைமை அலுவலகத்துக்கும் குறுந்தகவல் சென்றது. இதை பார்த்த வங்கி அதிகாரிகள், உடனடியாக மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள், அலாரம் ஒலித்ததால் பயந்துபோன மர்மநபர்கள், கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது.
இது குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான கொள்ளையர்களின் உருவங்களை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story