திருத்தணியில் இருந்து தடையை மீறி புறப்பட்டனர் பா.ஜனதா வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் - எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய தொண்டர்கள் கைது


திருத்தணியில் இருந்து தடையை மீறி புறப்பட்டனர் பா.ஜனதா வேல் யாத்திரை தடுத்து நிறுத்தம் - எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய தொண்டர்கள் கைது
x
தினத்தந்தி 7 Nov 2020 3:30 AM IST (Updated: 7 Nov 2020 5:10 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணியில் இருந்து தடையை மீறி வேல் யாத்திரை புறப்பட்ட பா.ஜனதா கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய பா.ஜனதா தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

தமிழ்கடவுள் முருக னின் ‘கந்தசஷ்டி’ கவசம் பாடல் கருப்பர் கூட்டம் ‘யூடியுப்’ சேனலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இழிவுப்படுத்தப்பட்டது.

அப்போது பா.ஜ.க. வினர் முருகனின் வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தி, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்தநிலையில் தமிழக பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் எல்.முருகன் அறிவித்தார். இந்த யாத்திரை நவம்பர் 6-ந் தேதி(நேற்று) திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 6-ந் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது.

பா.ஜ.க.வினரின் வேல்யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தபோது, கொரோனா சூழல் காரணமாக பா.ஜ.க.வினரின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. தடை விதிக்கப்பட்டாலும் ‘வேல் துள்ளி வரும்’ என்று பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.

தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்றுமுன்தினம் இரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘6-ந் தேதி (நேற்று) காலை 7.30 மணியளவில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்து திருத்தணி முருகனை தரிசித்துவிட்டு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய மற்றும் இந்து விரோத, தமிழின விரோத தமிழ் கடவுள்களை அவமதிக்கும் தேசவிரோத சக்திகளை வேரறுக்க, கொரோனா நோய்த்தொற்று காலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசின் நலத்திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையிலும், தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வளத்துடன் வலிமையுடன் நோய்நொடி இல்லாமல் வாழ்ந்து மகிழ வேண்டியும், அடுத்த ஆண்டு பா.ஜ.க. ஆட்சிதான் என்ற லட்சியத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ள வெற்றிவேல் யாத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள புறப்படுகிறார்’ என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி எல்.முருகன் காலை தன்னுடைய இல்லத்தில் இருந்து வேன் மூலம் திருத்தணிக்கு கிளம்பினார். அவர் காவி சட்டை- பச்சை நிற வேட்டி அணிந்திருந்தார். கையில் வேல் ஏந்தி இருந்தார். அப்போது அவருடன் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மற்றும் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, பொது செயலாளர் கரு. நாகராஜன், துணை தலைவர்கள் எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி, அண்ணாமலைஉள்ளிட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் கார்களில் சென்றனர்.

பூந்தமல்லியை அடுத்துள்ள நசரத்பேட்டை-திருமழிசை கூட்டு ரோடு பகுதியில் எல்.முருகன் வந்த வேனை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. பின்னர் 10 வாகனங்களுக்கு மட்டும் போலீசார் அனுமதி வழங்கினர். இதைத்தொடர்ந்து முருகனின் வாகனம் உள்பட முக்கிய நிர்வாகிகளின் வாகனங்கள் திருத்தணி நோக்கி புறப்பட்டு சென்றது.

இந்தநிலையில் தங்களுடைய வாகனத்தையும் அனுமதிக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் சிலரை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரமும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. திருவள்ளூர் மாவட்ட எல்லையில் இருந்து வழிநெடுகிலும் ஆங்காங்கே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் ‘வெற்றிவேல்... வீரவேல்...,’ ‘பாரத் மாதாவுக்கு ஜே...’ என்ற முழக்கத்துடன் எல்.முருகன் தலைமையிலான பா.ஜ.க. வினர் மதியம் 12.15 மணியளவில் திருத்தணி வந்தடைந்தனர். அவர்களுடன் அங்கு ஏற்கனவே வந்திருந்த முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அமைப்பு பொது செயலாளர் கேசவ விநாயகம், துணை தலைவர் நரேந்திரன் உள்பட நிர்வாகிகளும், தொண்டர்களும் சேர்ந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் திருத்தணி முருகன் கோவிலுக்கு செல்ல முற்பட்டனர். ஏற்கனவே போலீசார் திருத்தணி கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். எனவே பா.ஜ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்.முருகன், சி.டி.ரவி உள்பட முக்கிய நிர்வாகிகள் மட்டும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்

திருத்தணி முருகனை தரிசித்துவிட்டு எல்.முருகன் மீண்டும் திருத்தணி ரவுண்டானாவுக்கு திரும்பி வந்தார். அங்கு வேல் யாத்திரைக்கு தயாராக இருந்த வாகனத்தில் ஏறி அங்கு திரண்டிருந்த பா.ஜ.க.வினர் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாம் மற்ற மதத்தை மதிப்பவர்கள் தான். ஆனால் மற்றவர்கள் நம்மை திட்டும்போது சும்மா இருக்க முடியாது. தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆரம்பகாலம் முதற்கொண்டு இந்து கடவுள் களுக்கு எதிராக பேசி வருகிறார்கள்.

கந்தசஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் என்ற கயவர் கூட்டம் ஏளனப்படுத்தியது. கருப்பர் கூட்டத்தை தி.மு.க.தான் பின்னால் இருந்து இயக்குகிறது.

இந்த யாத்திரை தி.மு.க.வின் முகத்திரையை, போலியான வேஷத்தை கிழிக்கப்போகும் யாத்திரை. இந்த யாத்திரை தமிழகம் முழுவதும் நிச்சயம் வலம் வரும்.

தமிழக சட்டமன்றத்துக்கு பா.ஜ.க.வின் அதிகப்படியான எம்.எல்.ஏ.க்கள் செல்வார்கள். பா.ஜ.க. கூட்டணி தான் ஆட்சியில் இருக்கப் போகிறது. நம்முடைய ஆட்சி தமிழகத்தில் வந்தே தீரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத் தொடர்ந்து திருத்தணியில் இருந்து தடையை மீறி வேல்யாத்திரையை தொடங்குவதற்கு எல்.முருகன் உள்பட பா.ஜனதா கட்சியினர் முற்பட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் அவர்கள் ஒரு திருமண மண்படத்தில் வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

வேல் யாத்திரையை தடுத்து நிறுத்துவதற்காக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.நாகராஜன் தலைமையில் 1,500 போலீசார் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

வேல்யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் சாலைமறியலிலும் ஈடுபட்டனர்.

இதன்படி போராட்டத்தில் ஈடுபட்டதாக கோவையில் 350 பேரும், ஈரோட்டில் 115 பேரும், திருப்பூரில் 240 பேரும் கைது செய்யப்பட்டனர். அதுபோல திண்டுக்கல்லில் 600 பேரும், தேனியில் 300 பேரும் கைதானார்கள்.

கடலூர், சிதம்பரத்தில் 180 பேரும், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 400 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டது ஏன் என்பது குறித்து, அதன் ஊடகப்பிரிவு தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத் கூறியதாவது:-

திருத்தணி முருகன் கோவிலில் தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் கொண்டுவந்த வேல், முருகன் காலடியில் வைத்து பூஜிக்கப்பட்டது. பின்னர் அவர் அந்த வேலுடன் யாத்திரையை தொடங்கியபோது, போலீசார் கைது செய்தனர்.

நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், பொதுச் செயலாளர் கரு.நாகராஜன், துணைத் தலைவர்கள் எம்.என்.ராஜா, சக்கரவர்த்தி, அண்ணாமலை, வக்கீல் பிரிவு தலைவர் பால்கனகராஜ் உள்பட முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர். 10-க்கும் மேற்பட்ட பஸ்கள், பல்வேறு போலீஸ் வாகனங்கள் மூலம் கைதான 1,500-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினரை 3 மண்டபங்களில் தங்க வைத்தனர்.

யாத்திரையில் பங்கேற்பதற்காக திருத்தணியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த பா.ஜ.க.வினரை போலீசார் ஆங்காங்கே தடுத்துவிட்டனர். தங்க வைக்கப்பட்ட மண்டபங்களில் எந்தவித அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை. மின்சாரத்தையும் துண்டித்துவிட்டனர். எனவே, நாங்கள் சாலை மறியல் போராட்டத்தில் குதித்தோம்.

சமரசம் பேச வந்த போலீஸ் எஸ்.பி.அரவிந்தனுக்கும், எங்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர் மாலை 5 மணியளவில் எங்களை விடுவித்தனர். அப்போது, திடீரென்று எங்கள் தலைவர் வந்த யாத்திரை வாகனத்தை பறிமுதல் செய்யப்போவதாக போலீசார் அறிவித்தனர். இதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் அந்த முடிவை கைவிட்டனர்.

பின்னர், தலைவர் அதே வாகனத்தில் சென்னை திரும்பினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, “துள்ளிவரும் வேல் தொடர்ந்து துள்ளிவரும். யாத்திரை தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.க.வினரின் இந்த போராட்டத்தால், திருத்தணி நகர் முழுவதும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது.

Next Story