நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 Nov 2020 3:16 AM GMT (Updated: 7 Nov 2020 3:16 AM GMT)

நாகர்கோவிலில் 2 அரசு பஸ்கள் மீது கல்வீசி கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

அருமநல்லூரில் இருந்து நேற்று மாலை நாகர்கோவிலுக்கு ஒரு அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பயணிகள் பலர் இருந்தனர். நாகர்கோவில் புத்தேரி ரெயில்வே மேம்பாலம் அருகில் வந்தபோது அந்த பகுதியில் ஹெல்மெட் அணிந்தவாறு நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென பஸ்சின் முன்புறம் கல்வீசி விட்டு தப்பி ஓடினார். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பஸ் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

உடனே டிரைவர் பஸ்சை நிறுத்திவிட்டு கல்வீசிய நபரை துரத்தினார். ஆனால் அந்த நபர் மின்னல் வேகத்தில் ஓடி மாயமானார். இதையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் மீது கல் வீசிய இடத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் அனாதையாக நின்றது. கல்வீசிய நபர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவருடைய மோட்டார் சைக்கிளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்து பஸ் டிரைவர் வடசேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் நாகர்கோவில் துணை சூப்பிரண்டு வேணுகோபால், வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்ணாடி உடைக்கப்பட்ட அரசு பஸ்சை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகப்படும்படியாக நின்ற மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்தப் பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் கொடியும் வீசப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கும், கல்வீசி தாக்கியவருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் திடீர் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

இதேபோல நேற்று இரவு 10.30 மணியளவில் குழித்துறையில் இருந்து ஒரு அரசு பஸ் நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்துக்கு வந்தது. அந்த பஸ் வடசேரி மின்வாரிய அலுவலகம் அருகே வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபர் பஸ்சின் முன்பக்க கண்ணாடி மீது கல்வீசி தாக்கிவிட்டு ஓடினார். இதில் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது.

இதுதொடர்பாக டிரைவர் கொடுத்த புகாரின்பேரில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து மர்ம நபரை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story